×

தமிழகம் முழுவதும் பிட்காயின் மூலம் ரூ.3,000 கோடி மோசடி: ஈரோடு மாவட்ட எஸ்.பி.யிடம் புகார்

ஈரோடு: ஆன்லைன் வர்த்தகம், பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்தால், இருமடங்காக பணம் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ரூ.3 ஆயிரம் கோடி மோசடி செய்த நபர்கள் மீது ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆரியபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த சசிகுமார் (35). இவரும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஏஜென்டுகள் ஆகியோர் நேற்று ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பிட்காயின் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சசிகுமார் கூறியதாவது: நண்பர் மூலமாக மல்லியக்கரையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அறிமுகமானார். அவர் ஆன்லைனில் ஒரு தொழில் உள்ளது. அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். இதனால் கடந்த 2018ல் ஸ்மார்ட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து விளக்கமளித்தனர். அப்போது பன்னீர்செல்வம் கோபியைச் சேர்ந்த சுபாஷ்சாமிநாதன் மற்றும் ராமதுரை ஆகியோர் பெரிய தொழிலதிபர்கள். தனது மாமியார் மரியசெல்வம் மூலமாக பல ஆயிரம் பேரை சேர்த்து ஆன்லைன் மூலமாக பணம் பெற்று வருவதாக பன்னீர்செல்வம் கூறினார்.

இதை நம்பி எனக்கு தெரிந்த நண்பர்களையும் சேர்த்து ரூ.12 லட்சம் சேலத்தில் வைத்து அவரிடம் கொடுத்தேன். மேலும் 1,200 பேரை சேர்த்து ரூ.7 கோடி பணத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுத்தேன். இதுபற்றி பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக போன் செய்தால் கொலை செய்து விடுவதாக அந்த கும்பல் மிரட்டினர். ஆசை வார்த்தை கூறி ஆலைன் வணிகம், பிட்காயின், மைனிங் மூலமாக ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் புகார் அளிக்க வந்த ஏஜென்டுகள் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஜென்டுகள் செயல்பட்டு வந்தோம். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் அதை பிட்காயின், ஆன்லைன் வணிகம் மூலமாக மாதம் ரூ.15 ஆயிரம் வீதம் 2 ஆண்டுக்கு கொடுப்போம் என சுபாஷ் சாமிநாதன், ராஜதுரை, பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட கும்பல் கூறினர். இதை நம்பி நாங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்து கொடுத்தோம். ஆரம்பத்தில் உரியமுறையில் பணத்தை கொடுத்ததால் நம்பிக்கையுடன் அதிகமாக ஆட்களை சேர்த்து விட்டோம். ஆனால் அதற்கு பிறகு இந்த கும்பல் பணத்தை தராமல் மோசடி செய்தனர்.

இதுவரை 2 லட்சம் பேரிடம் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். பணத்தை திருப்பி கேட்டால் எங்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். சுபாஷ்சாமிநாதன் அகில பாரத இந்துமகா சபா கட்சியின் மாநில தலைவர் என கூறி மிரட்டுகிறார். எங்களிடம் பணம் கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்க முடியாமல் தவித்து வருகிறோம். ரூ.3 ஆயிரம் கோடி மோசடி செய்த சுபாஷ்சாமிநாதன், ராஜதுரை, பன்னீர்செல்வம், மரியசெல்வம், இளையராஜா, திருச்சியை சேர்ந்த ரமேஷ், டிரைவர் கோடீஸ்வரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, bitcoin, Rs 3,000 crore, fraud, Erode, district SP
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...