அடிமாட்டு விலைக்கு வாழைத்தார் விற்பனை: இலை விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை இலை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். நெல்லை மார்க்கெட்டுகளில் ஒரு இலை ரூ.3க்கு விற்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை மற்றும் அதை தொடர்ந்து தை மாத சுப நிகழ்வுகள் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் வாழை இலை விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக சில்லறை விற்பனை கடைகளில் ஒரு இலை ரூ.3க்கு விற்கப்பட்டு வருகிறது. பாளை மார்க்கெட்டில் 500 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.1000த்திற்கு மொத்த விற்பனையில் உள்ளது.

சில்லறை விற்பனைக்கு செல்லும்போது இலைகளின் விலை அதிகரிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட நாளில் இருந்தே வாழை இலைகளுக்கு மவுசு அதிகரித்தது. இருப்பினும் அத்தடை உறுதியாக கடைப்பிடிக்கப்படாத நிலையில், சில ஓட்டல்களில் உணவருந்த மீண்டும் பிளாஸ்டிக் பேப்பர்கள், செயற்கை வாழை இலைகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் வாழை இலைகளின் வரத்து குறைவு காரணமாக தற்போது மீண்டும் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை களக்காடு, நாங்குநேரி சுற்று வட்டார பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், வெள்ளூர், பேரூர், நெடுங்குளம், கால்வாய், கற்குளம், புளியங்குளம், பொன்னன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிகமாக காணப்படுகிறது. சமீபகாலமாக வாழை இலை வரத்து குறைவாக நெல்லை மார்க்கெட்டுகளில் இலைகளுக்கு கூடுதல் மவுசு காணப்படுகிறது. அதிலும் தை மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடப்பதால், இலைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், ‘‘வாழைத்தார்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்று கருதியே நாங்கள் கதலி கன்றுகளை அதிகம் நட்டோம். ஆனால் இப்போது வாழைத்தார்களுக்கு உரிய விலையில்லை. 50 வாழைக்காய் அடங்கிய வாழைக்குலை ரூ.30க்கு விலைபோகிறது. ஆனால் வாழை இலைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. எனவே இலைக்கட்டுளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட வெளிநகரங்களுக்கு செல்லும் வாழை இலைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது’’ என்றனர்.

Related Stories: