ஆந்திர பிரதேச மேலவை கலைப்பு: பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு

அமராவதி: சட்ட மேலவையை கலைத்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி தெலங்கானா மாநிலத்திற்காக தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஏற்படுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இதையடுத்து 2014 ஜூன் மாதம் அப்போதைய மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆந்திரா, தெலங்கானா என மாநிலத்தை பிரித்தது. மாநில பிரிவினைக்கான மசோதாவில் 10 ஆண்டுகளுக்கு ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலத்திற்கும் ஐதராபாத் ஒருங்கிணைந்த தலைநகராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் குண்டூர் மாவட்டத்தில் மூன்று மண்டலங்களில் உள்ள 29 கிராமங்களில் ஒருங்கிணைத்து அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து தற்காலிக  தலைமைச்செயலகம், சட்டப்பேரவை கட்டிடம், உயர் நீதிமன்றம் அமைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி நடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தொடர்ந்து, அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார். சந்திரபாபு, ஆந்திர முதல்வராக இருந்த 5 ஆண்டுகாலத்தில் அவரது முழு கவனமும் தலைநகர் அமராவதியை அபிவிருத்தி செய்வதிலேயே இருந்தது. இதற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனமான நார்மன் பாஸ்டர் நிறுவனத்தின் மூலம் அமராவதி தலைநகர் வடிவமைக்கப்பட்டது. ஆனால், ஜெகன்மோகன் முதல்வரான பின் தலைநகர் அமராவதியில் நடைபெற்று வந்த அபிவிருத்தி பணிகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன. இந்நிலையில், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை இடம் பெறும் தலைநகராகவும், கர்னூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்ற வழிவகை செய்யும் மசோதாவிற்கு கடந்த வாரம் ஆந்திரா சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆந்திராவின் மூன்று தலை நகரங்கள் மசோதாவுக்கும், அமராவதியைச் சார்ந்து உருவாக்கப்பட்ட தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையமான சி.ஆர்.டி.ஏ.வை திரும்பப் பெறும் மசோதாவுக்கும் சட்ட மேலவையில் ஒப்புதல் பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், அமைச்சரவை ஒப்புதலுடன் ஆந்திர பிரதேச சட்டசபையில் சட்டமன்ற மேலவையை கலைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 133 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்காக அம்மாநில அரசு இயற்றிய மசோதாவை, தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அம்மாநில சட்ட மேலவை அனுப்பியதை அடுத்து, தற்போது சட்ட மேலவை கலைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி:  சட்ட மேலவைக்காக ஆண்டுதோறும் 60 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. சட்டப்பேரவை இயற்றும் மசோதாக்களை தடுக்கும் பணியில் ஈடுபடும் சட்ட மேலவைக்கு செலவு செய்வது வீண் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், தொடர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: