கணவர் மாயம் என புகார் கொடுத்தவருடன் தொடர்பு: விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் இளம்பெண்ணுடன் ஏட்டு உல்லாசம்... வீட்டை பூட்டி ஊர்மக்கள் சிறைபிடிப்பு

துறையூர்: கணவரை காணவில்லை, கண்டுபிடித்து கொடுங்கள் என புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அடிக்கடி இரவில் அந்த பெண் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்த ஏட்டுவை கையும் களவுமாக ஊர்மக்கள் பொறி வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள புலிவலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (25), இவரது மனைவி லட்சுமி (27). (இருவரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சந்தோஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன் வேலைக்காக சென்னைக்கு சென்றார்.

Advertising
Advertising

லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 4 மாதங்களாக கணவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. எனவே, லட்சுமி தனது கணவனை காணவில்லை என புகார் கொடுக்க புலிவலம் போலீஸ் நிலையம் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு ராமர் (43), லட்சுமியிடம் புகார் மனுவை வாங்கி விசாரித்தார். கணவர் இன்றி அவர் தனிமையில் இருப்பதை தெரிந்து கொண்ட ஏட்டு ராமர் லட்சுமியை விசாரணை என்ற பெயரில் அடிக்கடி போலீஸ் நிலையம் வரவழைத்தார். பின்னர் அவரது செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு நள்ளிரவில் விசாரணை என்ற பெயரில் பேச தொடங்கினார்.

இப்படி பல நாட்கள் பேசியதை தொடர்ந்து இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து ஏட்டு ராமரின் விசாரணை லட்சுமி வீடு வரை நீடித்தது. அடிக்கடி நள்ளிரவில் வீட்டுக்கு போயி லட்சுமியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் இருக்கும் இளம் பெண் வீட்டுக்கு ஏட்டு ஏன் அடிக்கடி வருகிறார் என ஊர்மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு ஊர் அடங்கிய நேரத்தில் ஏட்டு ராமர் லட்சுமி வீட்டுக்கு வந்தார். லட்சுமி கதவை திறந்ததும் உள்ளே சென்றார். பின்னர் உள்பக்கமாக தாழ்போட்டுக்கொண்டனர்.

இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் வெளிப்பக்கமாக பூட்டு போட்டு வீட்டை பூட்டிவிட்டனர். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100க்கு போன் செய்து ஏட்டு ராமரின் நள்ளிரவு ‘விசாரணை’ குறித்து தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் புலிவலம் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கதவை தட்டி ஏட்டு ராமரை வெளியே வரும்படி கூறினர். அவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது ஊர் மக்களும், புலிவலம் போலீசாரும் அங்கு நின்றிருந்தனர். உள்ளே ரகசிய விசாரணை நடத்திய ஏட்டு ராமரையும், லட்சுமியும் வெளியே அழைத்து வந்தனர். இதை ஊர்மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் ஏட்டு அதிர்ச்சி அடைந்து முகத்தை கைகளால் மூடினார்.

படம் பிடித்தவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார். பின்னர் ஏட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஏட்டு ராமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லட்சுமியின் அக்கா புலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் எஸ்.ஐ. முத்துசாமி அந்த புகாரை பெற மறுத்து விட்டார். எனவே, ஜீயபுரம் டிஎஸ்பி கோகிலாவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டார். அக்கம் பக்கத்தினரிடம் என்ன நடந்தது என விசாரணை நடத்தினார். பல மாதங்களாக ஏட்டு ராமர் நடத்திய நள்ளிரவு விசாரணை குறித்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. ஜியாவுல் ஹக்குக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஏட்டு ராமர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏட்டு ராமர் திருமணமானவர். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

Related Stories: