நிர்பயா கொலை வழக்கு: சாட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கில் உள்ள ஒரே சாட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி மரண தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் தந்தை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் வினய் ஷர்மா, முகேஷ் குமார், பவன் குப்தா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதான குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

குற்றம்சாட்டப்பட்ட நேரத்தில் மற்றொரு குற்றவாளி ஒரு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில், 2012 டிசம்பர் 16ம் தேதியன்று ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவியை ஆறு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்தபோது நேரில் கண்ட உயிரிழந்த நிர்பயாவின் நண்பர் இவ்வழக்கு விசாரணையின்போது ஒரே சாட்சியாக வந்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி பவன் குப்தாவின் தந்தை டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிர்பயாவின் நண்பர் வாக்குமூலம் பொய்யானது. அவர் நீதிமன்றத்தில் தவறான சாட்சியம் அளித்துள்ளார். எனவே, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அவர் சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மேலும், பேருந்தில் நிர்பயாவுடன் வந்த இளைஞர் நேர்காணல்களை வழங்குவதற்காக சேனல்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு தான் நேரில் கண்டதாக சில பொய்யான செய்திகளைக் கூறி அவர், வழக்கை ஒரு ஊடக விசாரணையாக மாற்றியுள்ளார். அவருக்குப் பின்னால் யாரோ அவரை வழிநடத்துகின்னர். இவ்வழக்கில் ஒரே சாட்சியாக அவர் இருப்பதால், அவரிடம் ஒரு புலனாய்வு விசாரணையை நடத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. அவரது சாட்சியம் வழக்கின் முடிவை கடுமையாகப் பாதித்துள்ளது, என கூறியிருந்தார். இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பவன் குப்தாவின் தந்தை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: