பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

விருதுநகர்: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை தூக்கிலிட வேண்டும் என  பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என கூறிய அன்புமணி, சிவகாசியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும், பாலியல் வன்கொடுமை குறித்து குழந்தைகள், மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். குழந்தைகள் பெண்கள் மத்தியில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தொடர்ந்து தள்ளிப்போகிறது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தள்ளி வைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பூரண மதுவிலக்கை தற்போது ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கு நாங்கள் தான் காரணம். தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். எங்களது இலக்கு பூரண மதுவிலக்கு தான். ஒரு சொட்டு சாராயம் கூட இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அணுகி பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் உறுதியாக கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: