சட்டவிரோத பேனர் வழக்கில் திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்?... ஐகோர்ட் கேள்வி

சென்னை: சட்டவிரோத பேனர் வழக்கில் திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ கடந்த மாதம் 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக அதிமுக-வினர்  வைத்திருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. ஏற்கெனவே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம்  பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. இந்நிலையில் சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கு உள்ளிட்ட வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று (ஜன.27) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் சுபஸ்ரீ வழக்கில் சம்மந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், கூறினார். இந்நிலையில் சுபஸ்ரீ சம்பவத்திற்கு முன் சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் நிலை என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேபோன்று அரசியல் கட்சியினர்கள் தொண்டர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி பிராமண பத்திரம் தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவின் படி திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சார்பில் தான் இதுவரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிற அரசியல் கட்சிகள் ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். அரசு செலவில் லட்சக்கணக்கான ரூபாய் விளம்பரத்துக்காக செலவிடுவது தொடர்பான வழக்கில் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுப்பது தொடர்பான கொள்கைகள் ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா என பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் சட்ட விதிகளை பின்பற்றி பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது முடிவெடுப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் எனவும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்.27-ம் தே திக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.


Tags : DMK ,AIADMK ,parties , Illegal Banner, Affidavit, Icort
× RELATED சமுதாய உணவுக் கூடங்கள் அமைப்பது...