கேரளா, ராஜஸ்தானைத் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்!

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு(சிஏஏ) எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைகளில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்தை சீா்குலைக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும். பாஜக அரசு செயல்படுத்த முயற்சித்து வரும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை முற்றிலுமாக மறுதலிக்க வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ​பெரும்பான்மை இருப்பதால், இந்த தீர்மானம் நிறைவேறுவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை(என்பிஆர்) அமல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, அதைக் கவனமாகப் படிக்க வேண்டும் என அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களையும் வலியுறுத்துகிறேன். சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதில் உள்ள அபாயம் தெரிவதன் காரணத்தினால்தான் மக்கள் போராடுகின்றனர்.

சிஏஏவுக்கு எதிராக நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றுவோம். அனைவரும் ஒப்புக்கொண்டால், கொல்கத்தாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு(என்ஆர்சி) ஆதரவாக உள்ள என்பிஆர்-இல் இடம்பெற்றுள்ள நிபந்தனைப் பிரிவுகளை மத்திய அரசு நீக்க வேண்டும். என்பிஆர் என்பது ஒரு அபாயகரமான விளையாட்டு, என தெரிவித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Kerala ,Rajasthan ,state ,West Bengal Assembly ,Mamata Banerjee ,Bengal , Citizenship Amendment Act, West Bengal, resolution, Mamta Banerjee
× RELATED கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் வழியில்...