உதகையில் கல்லட்டி நீர் வீழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்கள்: 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

நீலகிரி:   உதகையில் தடையை மீறி கல்லட்டி நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கினர். அவர்களின் உடலை தேடும் பனி 2வது நாளாக நீடித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியின் ஈமச்சடங்குக்காக திருப்பூரை சேர்ந்த நண்பர்கள் ஆனந்த், விஜயகுமார் ஆகியோர் இன்று உதகை வந்துள்ளனர். ஈமச்சடங்கு முடிந்த பின்னர் சுந்தர்ராஜ், ஆனந்த, விஜயகுமார், உதகை விக்டோரியா ஹால் பகுதியை சேர்ந்த சாமுவேல்(23), எல்க்ஹில் பகுதியை சேர்ந்த கணேஷ்(24), பரத் ஆகியோர் கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இவர்களில் 5 பேர் நீச்சல் தெரியாததால் பாறையில் அமர்ந்திருக்கின்றனர்.

சாமுவேல், கணேஷ் ஆகிய இருவர் மட்டும் நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளனர். அவர்களை நண்பர்கள் செல்போனில் படம் பிடித்தனர். படம்பிடித்து கொண்டிருக்கும் போதே அவர்கள் நீரில் மூழ்கினர். இது குறித்து நண்பர்கள் புதுமந்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் புதுமந்து உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் வந்து  7 மணிவரை உடல்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அதற்குமேல் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 2வது நாளாக 2 இளைஞர்களையும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.  

தண்ணீரில் விழுந்தவர்கள் உடல்கள் கிடைக்காததால் அவர்கள் இருவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கல்லட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடை செய்யப்பட்ட நிலையில், இவர்கள் அத்துமீறி நுழைந்து தண்ணீரில் குளித்தால் இந்த துயர் சம்பவம் ஏற்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.இதனிடையே அப்பகுதி மக்கள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் வீழ்ச்சியில் போதுமான பாதுகாப்பு பணியில் வனத்துறை ஊழியர்கள் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த நீர் வீழ்ச்சியில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் எவ்வித பாதுகாப்பு பணியும் வனத்துறையினரால் செய்யப்படாதது வேதனையளிப்பாத மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: