×

மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்தது அதிரையில் குதிரை வணிகம் புத்துயிர் பெறுமா?...பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் குதிரை வணிகர் கொடிகட்டி பறந்தது. இந்நிலையில் வருங்காலங்களில் குதிரை வணிகம் புத்துயிர் பெறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதிராம்பட்டினம் 21 வார்டுகள் கொண்ட பேரூராட்சி பகுதியாகும். இந்த பகுதி அதிவீரராமபாண்டியன் 400 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட பகுதியாகும். அதிவீரராமபாண்டியன் ஆட்சி செய்ததால் அதிவீரராமபாண்டியர் பட்டணம் என்ற பெயர் சூட்டப்பட்டு நாளடைவில் அது அதிராம்பட்டினமாக மாறியது. அதிராம்பட்டினம் பகதியில் மன்னர் காலத்திலிருந்தே குதிரை வணிகம் துவங்கியது. அது மேலும் வளர்ச்சியடைந்து நாளடைவில் குதிரைச்சந்தை அமைக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு குதிரைகளை ஏற்றுமதி செய்யவும், வளைகுடா நாடுகளில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்யவும் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் அதிராம்பட்டினத்துக்கு குதிரை வணிகம் செய்ய வந்தனர்.

இங்கு குதிரை சந்தை இருந்ததால் குதிரைகளை கடல் வழியாக கொண்டு செல்லவும் பல்வேறு நாடுகளிலிருந்து வாங்கப்படும் குதிரைகளை கடல் வழியாக கொண்டு வரவும் அதிராம்பட்டினத்தில் கப்பல் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இது ஆங்கிலேயர் காலத்திலும் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் நாளடைவில் மன்னர்கள் ஆட்சி நிறைவு பெற்று மக்கள் ஆட்சி வந்த பிறகு கார் உள்ளிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இதனால் குதிரைகளின் பயன்பாடு குறைந்தது. இதையடுத்து அதிராம்பட்டினத்தில் உள்ள குதிரைச்சந்தை மூடப்பட்டதால் குதிரை வணிகம் முடங்கி போனது. குதிரைகளை பொறுத்தவரையில் தற்போது பந்தய குதிரைகள் மற்றும் மார்வாடி குதிரைகள் என இருவகை குதிரைகள், தமிழ்நாட்டில் உள்ளன. இதில் மார்வாடி குதிரைகள் அதிக விலை போகக்கூடியதாகும். குறைந்தது ரூ.10 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.1 கோடி வரை விலை இருக்கும்.

இந்நிலையில் பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் மீண்டும் அதிராம்பட்டினத்தில் தற்போதைய இளையதலைமுறையினர் குதிரையின் மீது ஆர்வம் கொண்டு பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை போகக்கூடிய மார்வாடி வகையை சேர்ந்த குதிரைகளை விலைக்கு வாங்கி வந்து அதிராம்பட்டினத்தில் குதிரை பண்ணை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் மீண்டும் புத்துயிர் பெற தற்போதுள்ள இளைய தலைமுறையினர் மூலம் வாய்ப்பு இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிராம்பட்டினம் குதிரை வணிகம் புத்துயிர் பெற அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : King , King, Stripe, Horse Trade, General
× RELATED இது எனது 240வது சந்தோஷமான தோல்வி: தேர்தல் மன்னன் லகலக