சின்னமனூரில் குடியரசு தினத்தன்று மகாத்மா காந்தி சிலையை கண்டு கொள்ளாத நகராட்சி

சின்னமனூர்: இந்திய குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி, ஊராட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சின்னமனூரில் சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்திக்கு பெருமை சேர்க்கும் வகையில் பெருமாள் கோயில் நுழைவாயிலில் காந்தி சிலை வைக்கப்பட்டது.  தேனி என்.ஆர்.தியாகராஜன் எம்எல்ஏ தலைமையில்  1958ம் ஆண்டு அக்.14 ம் தேதி  அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், காந்தி சிலையைத் திறந்து வைத்தார். இந்த சிலையை சின்னமனூர் நகராட்சியினர் பராமரித்து வந்தனர். ஏற்கனவே மாலையில் மின்விளக்குகள் சரிவர எரியவிடாமல் காந்திசிலை கும்மிருட்டில் தான் இருக்கும்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம், காந்தியின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று காந்தியின் உருவச்சிலையை சுத்தப்படுத்தி மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படும். பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் காந்தி சிலைக்கு அன்றைய தினங்களில் மாலை அணிவிப்பார்கள். நேற்று குடியரசு தினத்தன்று காந்தி சிலை சுத்தம் செய்யப்படாமல், மாலை அணிவித்து மரியாதை செய்யப்படாமல் இருந்தது. சின்னமனூர் நகராட்சி காந்தி சிலையை சுத்தம் செய்து மாலை அணிவிக்க மறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். சிலர் காந்தி சிலைக்கு முன்பாக பெரிய தட்டிகள் வைத்து மறைத்து  வருகின்றனர். இந்திய சுதந்திரம் என்றால் நினைவிற்கு வரும் காந்தியின் பெயரை, சின்னமனூர் நகராட்சி குடியரசு தினத்தன்று கூட மறந்து விட்டது பெரும் வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் கவலைப்பட்டனர்.

Related Stories: