தமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

சென்னை: கரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சுகாதார அதிகாரிகளுடன் அவர், ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் யாருக்கும்  கரோனா வைரஸால் பாதிப்பு இல்லை என தெரிவித்தார். சீனாவிலிருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது என குறிப்பிட்ட அமைச்சர், கரோனா வைரஸ் குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.  நாள்தோறும் விமானம் மூலம் சீனாவிலிருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை, திருச்சி கோவை விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. ஆகவே தமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் 3 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு செய்கிறது. இன்றிலிருந்து தொடர்ந்து கரோனா வைரஸ் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா வைரஸ் என்பது சுவாசிப்பதன் மூலமாக தான் பரவுகிறது என குறிப்பிட்டார். இந்நிலையில் கரோனா வைரஸ் சுவாச குழாயினுள் புகுந்து, சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும். இது சில நாட்களில் உயிரையும் பறிக்கும் அளவு வீரியம் வாய்ந்ததாக உள்ளது என சீன மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories: