×

ஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க தடை: சட்ட மேலவையை கலைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்

அமராவதி: தனி தெலங்கானா மாநிலத்திற்காக தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஏற்படுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இதையடுத்து 2014 ஜூன் மாதம் அப்போதைய மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆந்திரா, தெலங்கானா என மாநிலத்தை பிரித்தது. மாநில பிரிவினைக்கான மசோதாவில் 10 ஆண்டுகளுக்கு ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலத்திற்கும் ஐதராபாத் ஒருங்கிணைந்த தலைநகராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் குண்டூர் மாவட்டத்தில் மூன்று மண்டலங்களில் உள்ள 29 கிராமங்களில் ஒருங்கிணைத்து அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து தற்காலிக  தலைமைச்செயலகம், சட்டப்பேரவை கட்டிடம், உயர் நீதிமன்றம் அமைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தொடர்ந்து, அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றார். சந்திரபாபு, ஆந்திர முதல்வராக இருந்த 5 ஆண்டுகாலத்தில் அவரது முழு கவனமும் தலைநகர் அமராவதியை அபிவிருத்தி செய்வதிலேயே இருந்தது. இதற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனமான நார்மன் பாஸ்டர் நிறுவனத்தின் மூலம் அமராவதி தலைநகர் வடிவமைக்கப்பட்டது. ஆனால், ஜெகன்மோகன் முதல்வரான பின் தலைநகர் அமராவதியில் நடைபெற்று வந்த அபிவிருத்தி பணிகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை இடம் பெறும் தலைநகராகவும், கர்னூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்ற வழிவகை செய்யும் மசோதாவிற்கு கடந்த வாரம் ஆந்திரா சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ஆந்திராவின் மூன்று தலை நகரங்கள் மசோதாவுக்கும், அமராவதியைச் சார்ந்து உருவாக்கப்பட்ட தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையமான சி.ஆர்.டி.ஏ.வை திரும்பப் பெறும் மசோதாவுக்கும் சட்ட மேலவையில் ஒப்புதல் பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த அவையையே கலைப்பது குறித்த கருத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே சட்டப்பேரவையில் தெரிவித்த நிலையில்,
அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ள நிலையில் இன்று இந்தத் தீர்மானம் விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : chief minister ,Cabinet ,capitals ,Andhra ,Jagan Mohan Reddy Three ,CM Jagan Mohan Reddy , Cabinet approves Chief Minister Jagan Mohan Reddy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...