குழாய் உடைந்து ஒரு வாரமாச்சு 4 ஊராட்சி மக்கள் குடிநீரின்றி தவிப்பு

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே அரசு ஒப்பந்ததாரரால் பைப் உடைந்ததால் குடிநீர் 4 ஊராட்சிகளில் ஒருவாரத்திற்கும் மேலாக குடிநீர் இல்லாமல் கிராமமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மந்திசுனை. மூலகடை, முத்தாலம் பாறை, நரியூத்து, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் கடந்த ஏழு நாட்களாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் தனியார் கடைகளில் கேன்களில் தண்ணீர் விலைக்கு வாங்கி குடித்து வரும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ஊராட்சிமன்ற அலுவலகத்தை ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

குடிநீர் குழாய் பைப்புகளை உடைத்து விட்ட அரசு ஒப்பந்ததாரரிடம் இது சம்பந்தமாக ஊராட்சி மன்றதலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் எடுத்துரைத்தும் பழுதுநீக்கித் தராமல் தாமதிப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மயிலாடும்பாறை மூலவைகை ஆற்றிலிருந்து கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வந்த  குடிநீர் தற்போது வழங்கப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் 4 ஊராட்சி மக்கள்  தனியார் தோட்டங்களையும், கேன் தண்ணீரையும் விலைக்கு வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து முத்தாலம்பாறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைக்கனி கூறுகையில், கடந்த ஏழு நாட்களாக குடிநீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து துறை ரீதியான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: