கொரோனா வைரஸால் நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தது மத்திய சுகாதாரத்துறை: இந்திய எல்லையில் தீவிர கண்காணிப்பு!

டெல்லி: கொரோனா வைரஸால் நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு இந்த தொற்று நோய் பரவியுள்ளது. இது வரை 80க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும், 3 ஆயிரம் பேர் வரை நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

தற்போது, இந்த வைரஸ் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள், சீனாவில் உள்ள தங்கள் நாட்டு பிரஜைகளை திருப்பி அழைத்து வர ஏற்பாடுகளை செய்துள்ளன. பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவும் சீனாவில் தங்கி படிக்கும் மாணவர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வருகிறது. இதற்கென தனியாக ஒரு இலவச தொடர்பு எண்ணை அளித்துள்ளது. மேலும், இந்தியா திரும்புவோருக்கு தூதகரங்கள் மூலமாக அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கொரோனா வைரஸால் நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அண்மையில் சீன நகரமான வுஹானில் இருந்து திரும்பிய மாணவர் ஒருவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடையாளம் கண்டதையடுத்து நேபாளம் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்றை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியதாக நேபாளம் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வுஹானில் பி.எச்.டி பட்டப்படிப்பு படித்து வரும் 31 வயதுடைய மாணவர், ஜனவரி 5ம் தேதி சீன நகரத்திலிருந்து திரும்பியிருந்தார். அவர் சுவாசக் கோளாறினால் மருத்துவமனைக்கு சென்று ஜனவரி 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த செய்தியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறதி செய்துள்ளது. இதனையடுத்து, மேற்கு வங்கத்தின் பானிடங்கி-நேபாள எல்லையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: