குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: கைது செய்யப்பட்ட 2 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து துறைத்தலைமை நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 4 பதவியில் 9,398 இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்தது. நவம்பர் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.  இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியதில் முறையேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமேஸ்வரம், கீழக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய வெளி மாவட்டங்களை சேர்ந்த 99 பேரை டிஎன்பிஎஸ்சி வாழ்நாள் முழுவதும்  தேர்வு எழுதவும் தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டது.

Advertising
Advertising

இந்த முறைகேட்டின் பின்னணியில் பெரிய அளவில் இடைத்தரகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஈடுபட்டது உறுதியானதால் இந்த வழக்கு தமிழக அரசு உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி  ஜாபர்சேட் தலைமையில், எஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இடைத்தரகராக செயல்பட்ட, டிபிஐ அலுவலக உதவியாளராக பணியாற்றும் திருவல்லிக்கேணியைச்  சேர்ந்த ரமேஷ் (39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த திருக்குமரன் (35), தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (21), ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன்  (38),திருவாடானை தாலுகா, கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா சிறுகிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி கவுரிபேட்டை பகுதியை சேர்ந்த மு.காலேஷா (29)ஆகிய 7 பேரை சிபிசிஐடி  போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சீனிவாசன், சிவராஜ் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், டிபிஐ அலுவலக உதவியாளராக பணியாற்றிய ரமேஷ் என்பவரை பள்ளிக்கல்வித்துறையும், எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றிய முத்துக்குமரன் என்பவரையும் பணியிடை நீக்கம் செய்து அந்தந்த துறைத்தலைமை  உத்தரவிட்டுள்ளது.

Related Stories: