குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு பதிலடி

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் 150க்கும் மேற்பட்டோர் 5 பக்க தீர்மானம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அடுத்த வாரம், பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதில் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த தீர்மானத்தில், இந்திய அரசு, சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்டரீதியாக பறிப்பதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை உருவாக்கி உள்ளது. அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டால், ஏராளமானவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். குடியுரிமை தொடர்பான சர்வதேச கடமைகளை மீறும்வகையில் இந்தியா இச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

Advertising
Advertising

இது, அடிப்படையிலேயே பாரபட்சமானது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் சுட்டிக்காட்டி உள்ளார். ஆகவே, ஐரோப்பிய யூனியன் தலையிட்டு மனித உரிமைகளை காப்பதுடன், இந்த சட்டத்தை நிறுத்திவைக்க செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் இந்தியா கூறியுள்ளது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என கூறியுள்ள இந்தியா, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளவர்கள் அதை நிறைவேற்றுவதற்கு முன்பு, முழு விவரங்களையும் தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: