ஸ்பெயினில் இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளி சிறந்த நடிகைக்கான விருது பெற்று 84 வயது மூதாட்டி அசத்தல்!

84 வயது மூதாட்டி ஒருவர் இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளி சிறந்த நடிகைக்கான விருது பெற்று அசத்தியிருக்கிறார். பெனடிக்டா சான்ச்செஸ், ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். திரைப்படங்களில் நடித்திராத ஒருவர், அதுவும் 84 வயதில் இளம் நடிகைகளை தோற்கடித்து சிறந்த நடிகைக்கான விருது பெறுவதெல்லாம் அத்தனை எளிதான காரியம் அல்ல. அதைத்தான் பெனடிக்டா சான்ச்செஸ் நிகழ்த்தியிருந்தார். அதனால் ஸ்பெயின் திரையுலகம் இவரை வியர்ந்து பார்க்கிறது. ஸ்பெயின் நாட்டின் திரைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கொயா திரைப்பட விருது வழங்கும் விழா தெற்கு ஸ்பெயினில் உள்ள மலகா பகுதியில் நடைபெற்றது. ஸ்பெயின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் இந்த விருது வழங்கும் விழாவுக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்ற திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என விருது பட்டியலை அறிவிக்க அறிவிக்க ஆரவாரம் விண்ணை பிளந்தது.

Advertising
Advertising

சிறந்த புதுமுக நடிகைக்கான விருது எப்படியும் தங்களுக்கு தான் கிடைக்கும் என, இளம் நடிகைகள் அறிவிக்கப்போகும் தங்களது பெயரை கேட்க காத்திருந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் 84 வயது மூதாட்டி பெனடிக்டா சான்ச்செஸ் fire will come படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் கவனிக்கப்பட்ட மற்றொரு அம்சம் என்னவென்றால் ரசிகர்களை தங்களது அழகாலும், நடிப்பாலும் கவர்ந்திருந்த 3 இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளியே பெனடிக்டா இந்த விருதை பெற்றுள்ளார். பெனடிக்டாவின் வாழ்க்கை இத்தனை மகிழ்ச்சியை இதற்கு முன்பு சந்தித்தது இல்லை. 17 வயதில் திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு, கணவன் இவ்வளவு தான் இவரது உலகம்.

ஆனால் கணவருடன் ஏற்பட்ட பிரிவால் மனதளவில் மிகவும் பாதிப்படைந்த பெனடிக்டா 1979ம் ஆண்டு மகளுடன் ஸ்பெயினுக்கு திரும்பி தனிமையில் வசிக்க ஆரம்பித்தார். தனது மகளின் வற்புறுத்தலால் உள்ளூர் நாடக குழுவில் சேர்ந்து பயிற்சி பெற்ற சான்ச்செஸ்கு அதற்கு பிறகே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த ஒரு வாய்ப்பு அவரது வாழ்க்கையையே இப்போது புரட்டி போட்டுவிட்டது. இதுவரை தனிமையில் வசித்த பெனடிக்டாவை சுற்றி இப்போது ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. விருது பெறுவதற்கு வயது தடையில்லை என்பதே இந்த மூதாட்டியின் உழைப்பு உலகுக்கு காட்டிவிட்டது. இந்த திரைப்படம்  கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: