உமர் அப்துல்லா புகைப்படம் வெளியீடு எதிரொலி: காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அப்போது அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பரூக்  அப்துல்லா,  உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரும் இதில் தப்பவில்லை. இதற்கிடையே, பனி மூடிய பின்னணியில் நீண்ட தாடியையும் கம்பளித் தொப்பி அணிந்தபடி இருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின்  படத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அது பெரும் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மம்தா பானர்ஜி, “உமர் அப்துல்லாவை என்னால் அடையாளம் காண முடியவில்லை. குடியரசு நாட்டில் தான் நாம் இருக்கிறோமா? இதெல்லாம் எப்போது முடிவுக்கு வரும்” என கேள்வி  எழுப்பியுள்ளார். ஒரு முன்னாள் முதல்வரின் நிலைமை இவ்வளவு மோசமானதாக மாறி உள்ளது, அரசியல் கட்சித் தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. வீட்டுக் காவலில் இருக்கும் உமர் அப்துல்லாவை, வெளியாட்கள் யாரும்  தொடர்புக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பல மாதங்களாக வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா பகிந்துள்ள புகைப்படம் வருத்தமளிக்கிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர்  அப்துல்லா, மெகபூபா முப்தி, பாரூக் அப்துல்லா மற்றும் பிற அரசியல் தலைவர்கள் விசாரணை அல்லது உரிய செயல்முறை இல்லாமல் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை  மத்திய அரசு உடனே விடுவித்து பள்ளத்தாக்கில் இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா நீண்ட தாடியுடன் உள்ள புகைப்படமும், இயல்பாக  அவர் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Umar Abdullah ,MK Stalin ,leaders ,house arrest ,home ,Kashmir , Omar Abdullah photo release echo: MK Stalin's urge to release political leaders from home in Kashmir
× RELATED உமர் அப்துல்லா விவகாரம்: ஜம்மு காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவு