இந்து தலைவர்களைக் கொல்ல சதி: 17 பயங்கரவாதிகள் மீதான விசாரணை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்

பெங்களூரு: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெங்களூருவில்  முகமது ஹனிஸ்கான், இம்ராக் கான், முகமது சையது என்ற 3 பயங்கரவாதிகளை கடந்த 7ம் தேதி சென்னை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர், கோலாரில் பதுங்கி இருந்த மெகபூப் பாட்ஷா உட்பட மேலும் 5 பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதானவர்கள் தென்னிந்தியாவில் இந்து அமைப்பு தலைவர்களை  கொலை செய்யவும், முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தவும் சதி திட்டம் தீட்டியிருந்ததும், சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மெகபூ பாட்சா உட்பட 17 பயங்கரவாதிகள் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சுத்தகுண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் 17 பயங்கரவாதிகள் மீது பதிவான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக, கைதாகி உள்ள பயங்கரவாதிகளிடம், அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Stories: