×

ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு அறிவிப்பு: விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்!

புதுடெல்லி: ஏர்இந்தியாவின் 100 சதவீதம் பங்குகளும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்குவதால், அந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாரிடம் விற்க மத்திய அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய விமான போக்குவரத்து துறைக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

கடந்த 2018-19ம் நிதி ஆண்டில் ரூ.8,556 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ள, ஏர் இந்தியாவின் தற்போதைய மொத்த கடன் ரூ.80 ஆயிரம் கோடி ஆகும். கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்கவும் நிர்வாக மேலாண்மை கட்டுப்பாட்டை மாற்றவும் தயார் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பு யாரையும் கவரவில்லை என்பதால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அரசிடம் மீதமுள்ள 24 சதவீத பங்குகள் மற்றும் அது தொடர்பான உரிமைகள், அதிகபடியான கடன் சுமை, விமான எரிபொருள் விலை நிலவரம், அன்னியச் செலாவணி பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கம் உள்பட பல காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என தகவல் வெளியாகியது.

இதைக் கருத்தில் கொண்டு புதிய உத்திகளை நிதியமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த நிலையில், ஏர்இந்தியாவின் 100 சதவீதம் பங்குகளும் தனியாருக்கு விற்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சுமார் ரூ.80,000 கோடி கடனில் உள்ளது. இதனால் இதனை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏர்இந்தியாவின் இணைப்பு நிறுவனமான AIXL மற்றும் AISATS-ன் 50 சதவீதம் பங்குளையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் வரும் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



Tags : Air India ,Government ,Stake Sale , Air India, 100% stake, private, Bids , central government
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...