ஈராக்கில் மீண்டும் பதற்றம்: அமெரிக்க தூதரகம் அருகே 5 ராக்கெட் குண்டுகள் வீச்சு

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பாதுகாப்பான பகுதியில் 5 ராக்கெட் குண்டுகள் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ படையினர் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். தீவிரவாதத்துக்கு துணை போனதால் சுலைமானியை கொன்றதாக அமெரிக்கா கூறியது. இதனால், அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம் நிலவியது.

Advertising
Advertising

அதைத்தொடர்ந்து, பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் அவ்வப்போது ராக்கெட் குண்டுவீச்சு சம்பவங்கள் நடக்கின்றன. தங்களால் எந்த இடத்தையும் குறிவைத்து தாக்க முடியும் என்பதை நிரூபிக்க இத்தகைய தாக்குதல் நடத்தியதாக ஈரானே சில சமயம் குண்டுவீச்சுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், நேற்றும் அமெரிக்க தூதரகத்தை ஒட்டிய பகுதிகளில் 5 ராக்கெட் குண்டுகள் வீசி தாக்கப்பட்டன. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஏற்கனவே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட வேண்டுமென அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பேரணியில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. ஈராக்கில் தற்போது 5000க்கும் மேற்பட்ட அமெரிக்க படை முகாமிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: