×

நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 282 கிராம சபைகளில் தீர்மானம்

சென்னை: நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் 282 கிராம சபை கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரிப்படுகையை 2 மண்டலங்களாக பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு 1-ல் விழுப்புரம், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2-ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், 5-வது ஏலத்துக்காக 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. இவற்றில் 4,064 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள ஒரு திட்டம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலும், தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்படுத்துவதால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைப்பதில் ‘ஏ கிரேடு’, ‘பி கிரேடு’ என பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ கிரேடு’ அமையும் பகுதியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது. ‘பி கிரேடு’  மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை. சுற்றுச்சூழல் கமிட்டியில் அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், 282 கூட்டங்களில், ஹைட்ரோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் அக்கரைபேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாரியம்மன்கோயிலில் நடந்தது. ஊராட்சிமன்ற தலைவர் அழியாநிதிமனோகரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், வங்ககடல் மீனவர் அமைப்பைச் சேர்ந்த குமரவேலு, ‘‘மீனவர்கள் மற்றும் விவசாயிகள் நலன்கருதி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறினார். இதனையே கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பொதுமக்களும் வலியுறுத்தினர். இறுதியாக ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்வது தொடர்பான தீர்மானம் வாசிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கீழ்வேளூர் ஒன்றியத்தில் இலுப்பூர், குருக்கத்தி ஊராட்சிகள், செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் ஊராட்சி என மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, வேதாரண்யம் ஒன்றியத்தில் 30 ஊராட்சியில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டம்: திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்புகளூர் ஊராட்சியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, தீர்மானத்துக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். இதேபோல், திருக்காரவாசல், பின்னவாசல், குன்னியூர் உட்பட  100 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், குடிநீர், மின்சாரம், சுடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கத்தரிநத்தம், ஊரணிபுரம், அழகியநாயகிபுரம், செருவாவிடுதி, கதிராமங்கலம், கள்ளபுலியூர் உள்ளிட்ட 12 கிராம ஊராட்சிகளில், ‘‘மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை அழிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை அனுமதிக்க முடியாது’’ என மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர், விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான வானூர், மரக்காணம் ஒன்றியத்தில் 35 கிராம சபை கூட்டங்களில் ைஹட்ரோ கார்பன் திடத்தை கொண்டு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர் மாவட்டத்தில் பி.முட்லூர், அரியக்குறிச்சி உள்ளிட்ட 60 கிராம ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், நெடுவாசல் வடக்கு, நெடுவாசல் தெற்கு, கற்காகுறிச்சி உள்பட 15 ஊராட்சிகளில் தீர்மானமும் நிறைவேறியது.

போலீஸ் அனுமதி தராவிட்டால்தடைமீறி இன்று போராட்டம்
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இன்றுமுதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் இன்று மாலை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கான துண்டறிக்கை பொதுமக்களிடம் நேற்று விநியோகித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் நேற்று இரவு வரை அனுமதி தரப்படவில்லை. போலீசார் அனுமதிக்காவிட்டால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Tags : districts ,Thiruvarur ,Tanjore ,Cuddalore ,Nagai ,Village Councils Against , Resolution , 282 Village , Councils against, Hydrocarbon Project
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...