தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையால் ‘எம்டிசி’யில் உயிரிழப்பு, விபத்து குறைந்தது: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: ‘தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையால் எம்டிசியில் உயிரிழப்பு விபத்துக்கள் 82 ஆக குறைந்துள்ளது’ என மேலாண் இயக்குநர் பேசினார்.

சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில் குடியரசு தினவிழா நேற்று சிறப்புடன் கொண்டாடப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அவர் ஆற்றிய உரையில், ‘சென்னை பெருநகர பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையினை பூர்த்தி செய்வதில், மாநகர் போக்குவரத்துக் கழகம் பெரும்பங்காற்றி வருகிறது. சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர் நடவடிக்கையின் பயனாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 112 ஆக இருந்த உயிரிழப்பு விபத்துக்கள், 82 ஆக குறைந்துள்ளது, பாராட்டுக்குரியது. இதனை இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். விபத்தில்லாமலும்,  பாதுகாப்பான முறையிலும் பேருந்துகளை இயக்கி, பயணிகளின் போக்குவரத்துத் தேவையினை நிறைவேற்றிட வேண்டும்’ எனத்தெரிவித்தார்.
Advertising
Advertising

கடந்த 2019ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த 66 ஓட்டுநர்கள், 33 நடத்துநர்கள்,  33 தொழில்நுட்பபணியாளர்கள், 8 தகுதிச் சான்றுபிரிவு தொழில்நுட்ப பணியாளர்கள், 3 உதவி பொறியாளர், 2 உதவி கிளை மேலாளர், 2 கிளை மேலாளர்கள், 2 மண்டல மேலாளர்கள், மாதாந்திர பயணச் சீட்டினை அதிக அளவில் விற்பனை செய்த 2 பணியாளர்கள், மேலும் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட 191 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களையும் வழங்கினார். பேருந்தில் பயணி தவறவிட்ட ரூ.32,300/- பணத்தை நேர்மையாக காவல் துறையினரிடம் ஒப்படைத்த தாம்பரம் பணிமனையைச் சார்ந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: