பல்வேறு துறைகளிலும் புதுச்சேரி வளர்ச்சி முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பாராட்டு

புதுச்சேரி: பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலம் முன்னோடியாக திகழுகிறது. இதற்காக பாடுபடும் முதல்வர் நாராயணசாமியை கிரண்பேடி பாராட்டி பேசினார். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது குடியரசு தினவிழா உரையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலம் நடைமுறை நிர்வாக காரணங்களால் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி முன்னோடியாக செயல்படுகிறது. திட்ட நிதியில் பெரும் பகுதி கல்வி, சுகாதாரம், வேளாண்மை, உட்கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு சார்ந்த திட்டங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது.

ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த  திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலம் சிறந்த நிர்வாக திறன் கொண்ட மாநிலமாக மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பணியாளர் நலத்துறை அறிவித்திருக்கிறது. சிறிய மாநிலங்களில் பொது சுகாதாரம், கல்வி, சட்டம்-ஒழுங்கு, நிதி மற்றும் சீரான வளர்ச்சி ஆகிய துறைகளில் முன்னோடியாக புதுச்சேரி திகழ்கிறது. இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக முதல்வர், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

புதுவையில் சட்டம்-ஒழுங்கு நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டுக்குள்ளும் உள்ளது. காவல்துறையின் துரித நடவடிக்கையால் குற்றவியல் சம்பவங்கள் குறைந்துள்ளன.  மக்களின் நலத்தையும் வளத்தையும் பாதுகாக்கும் வகையில் வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலமாகவும், நேரடி நியமனங்கள் மூலமாகவும் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுவை மக்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: