×

துறைமுகம், பல்கலை, போக்குவரத்து உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சோலார் தகடுகள்: மரபுசாரா எரிசக்தியை அதிகரிக்க மின்வாரியம் தீவிரம்

சென்னை: அரசு கிடங்குகள், துறைமுகம், பல்கலைக்கழகம், போக்குவரத்து உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சோலார் தகடுகளை அமைத்து, மரபுசாரா எரிசக்தியை அதிகரிக்க மின்வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. உலக அளவில் பெட்ரோலியம், நிலக்கரியை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மாற்றாக மரபுசாராா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் காற்றாலை, சூரிய ஒளி ஆற்றல் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓராண்டில் 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி கிடைப்பதால், சூரிய மின்உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பல நாடுகளில் கடலில் மிகப் பெரிய அளவில் சோலார் பேனல்கள் அமைத்து, சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சூரியசக்தி மின்உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாகக் குறைக்க முடியும். அதேபோல், நிலக்கரி உபயோகத்தைக் குறைத்து, வனத்தையும் பாதுகாக்கலாம். எனவே இதுகுறித்து ஆலோசித்த அரசு தமிழகத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க திட்டமிட்டது.

இதன்ஒருபகுதியாக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் கட்டடங்களின் மேற்கூரையில் மின் கட்டமைப்புடன் இணைக்கக்கூடிய சூரிய அமைப்புகளை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும் 2023ம் ஆண்டுக்குள் சூரிய எரிசக்தியில் 8,884 மெகா வாட் திறனை அடைவதற்கு ஏதுவாக, சூரிய எரிசக்திக் கொள்கை 2012 மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2019 தயாரிக்கப்பட்டது. இதன் மூலம், தமிழகத்தில் 9000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்கள் நிறுவுவதற்கான இலக்கினை அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து தாழ்வழுத்த மின் நுகந்வோருக்கு நிகர பயனீட்டளவு வசதியும், சூரிய மின்திட்டங்கள் சார்ந்த வேலைவாய்ப்புகளை மாநிலம் முழுவதும்  ஏற்படுத்த வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட சூரிய எரிசக்தி உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பை ஊக்குவித்தல், அதிதிறன் பயன்பாடு வகை மற்றும் நுகந்வோர் பயன்பாடு வகை மூலம் சூரிய எரிசக்தி உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்ேபாது அரசு கிடங்குகள், துறைமுகம்,  பல்கலைக்கழகம், போக்குவரத்து உள்ளிட்ட அரசு அலுவகங்களில் சோலார் தகடுகளை  அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் மரபுசாரா எரிசக்தியை அதிகரிக்க முடியும். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

மறுசுழற்சிக்கு நடவடிக்கை தேவை
கணினி, மொபைல் போன்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் அபரிமிதமான வளர்ச்சியால் இன்று எலக்ட்ரானிக் குப்பை குவிந்து கிடக்கிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இவ்வகையிலான குப்பை அதிக அளவில் உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்துவதற்கான பணியில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் சோலார் பேனல்களின் வாழ்நாள் காலம் முடிந்த பிறகு அவையும் குப்பைகளாக மாறிவிடும். எனவே இதை மறுசுழற்சி செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வழுத்துள்ளது.

Tags : government offices ,university , Solar plates , government offices, including port, university, transport
× RELATED பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன்...