×

திமுக வென்ற ஊராட்சிகளுக்கு குறைந்த நிதி வழங்கப்படும் என்று பேசிய கருப்பணனின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்: கவர்னரிடம் திமுக மனு

சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக அமைச்சரும், பவானி எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன், ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் நடைபெற்ற  எம்ஜிஆர் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் பிரிவினை, இழிவான சொற்களால் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளி
யானது. அமைச்சரின் பேச்சில், “ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால் தான் திமுக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இப்ப சத்தியமங்கலத்துல திமுக சேர்மன் வந்துட்டாங்க. அவங்களால என்ன செய்ய முடியும். அவங்க ஜெயித்தாலும் நாம தான் ஆளுங்கட்சி.
நாம பண உதவி கொடுத்தாத்தான் அவங்க வேலை செய்ய முடியும்.

நாம பணம் கொடுக்கலைன்னா அவங்க எப்படி வேலை செய்வாங்க. சத்தி ஒன்றியத்துல என்ன அடிப்படை வசதிகள் வரும். எதுவுமே வராதே. திமுகவில் வெற்றி பெற்ற சேர்மன்களிடம் பணம் கம்மியாகத்தான் கொடுப்போம்” என்று சொல்லியுள்ளார். அமைச்சர் கே.சி.கருப்பணனின் இந்த பேச்சு திமுகவை தேர்ந்தெடுத்த வாக்காளர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது.  அவரின் பேச்சு அரசியலமைப்பு ஒழுக்கத்துக்கும், பதவியேற்பின் போது எடுத்த உறுதிமொழிக்கும் முரணானது. பதவி ஏற்கும் போது இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பேன் என்று கூறியே பதவியேற்கின்றனர்.

கடமையை தவறினால் பதவியில் இருந்து நீக்கலாம் என்று சட்டம் 164ன்படி உறுதிமொழியும் ஏற்று கொள்கின்றனர். அதனை மீறும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த நிலையில் அமைச்சர் கே.சி.கருப்பணன் இது போன்று பேசியிருப்பது அவர் பதவியேற்று கொண்டதற்கு எதிரானது என்று முழுமையாக தெரிகிறது. இது போன்ற நபர்களை அமைச்சர் பதவியில் நீடிக்க செய்தால் மக்களுக்கு அரசு மீதான நம்பிக்கை இழக்க நேரிடும். எனவே, சட்டம் 164ல் கூறியுள்ளப்படி அவரை அழைத்து பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும். அப்படி அவர் பதவி விலக தவறும் பட்சத்தில், அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிப்படி அவரை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அமைச்சரவையில் இருந்து நீக்கி சட்டத்தை நிலை நிறுத்த வேண்டும்.

Tags : DMK ,minister ,finance minister ,governor ,Karunanan ,speaker , DMK, winning minister, lower finance minister, speaker, minister
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...