குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டதா?: தெலங்கானா முதல்வருக்கு மத்திய அமைச்சர் சவால்

ஐதராபாத்: ‘குடியுரிமை திருத்த சட்டத்தில் (சிஏஏ) உள்ள அம்சத்தால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் யாராவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதை காட்ட முடியுமா?’ என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, மத்திய  அமைச்சர் கிஷன் ரெட்டி சவால் விடுத்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சனிக்கிழமை அளித்த பேட்டியில், ‘குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பது தொடர்பாக மாநில கட்சிகள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளேன்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, மதச்சார்ப்பற்ற கட்சி. எல்லா நாட்டு மக்களுக்கும் ஜாதி, மத பேதமின்றி அடிப்படை உரிமைகளை அரசியல் சாசனம் வழங்குகிறது.

ஆனால், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் தவறான முடிவு. வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு காட்டுவது வேதனை அளிக்கிறது. மற்ற மாநிலங்களைப்போல், தெலங்கானாவும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம்,’ என்றார். இந்நிலையில், ஐதராபாத் வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தெலங்கானாவில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்திருப்பதை கண்டிக்கிறேன். இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளதை உங்களால் காட்ட முடியுமா? இந்த விஷயத்தில் பா.ஜ கட்சியை விமர்சிக்கும் உரிமை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு இல்லை. இவ்வாறு  அவர் கூறினார்.

300 பிரபலங்கள் எதிரான கருத்து

சிஏஏ சட்டத்துக்கு எதிராக நடிகர் நசிருதீன் ஷா, சினிமா தயாரிப்பாளர் மீரா நாயர், பாடகர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர் அமித்தவ் கோஷ், வரலாற்று அறிஞர் ரொமிலா தாபர் உள்ளிட்ட 300 பிரபலங்கள், சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய கலாச்சார அமைப்பு கடந்த 13ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் 300 பிரபலங்கள் கையெழுத்திட்டிருந்தனர். அதில் கூறியிருப்பதாவது:  சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை இந்திய ஆன்மாவுக்கு அச்சுறுத்தல். நாட்டின் பன்முகத்தன்மைக்கு உறுதி அளிக்கும் இந்திய அரசியல் சாசன விதிமுறைகளை எடுத்துக் கூறி மாணவர்கள் எழுப்பும் குரலுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

 தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ் ஒருவர் தங்கள் மூதாதையர் இங்கிருந்தார்கள் என்ற ஆவணத்தை தாக்கல் செய்ய முடியவில்லை என்றால், அவர்களின் குடியுரிமை பறிபோகும். என்ஆர்சி மூலம் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுவர்,  முஸ்லிம் ஆக இல்லையென்றால், அவர்கள் சிஏஏ மூலம் குடியுரிமை பெற தகுதி பெற்றுவிடுவர். அரசின் இந்த முரண்பாடான நோக்கத்தால், சிஏஏ நல்லது செய்யும் சட்டமாக தெரியவில்லை. இது மதரீதியிலான துன்புறுத்தலை சந்தித்த சிறுபான்மையினரை மட்டுமே காக்கும். இலங்கை, சீனா, மியான்மரில் இருந்து வந்த சிறுபான்மையினர், சிஏஏ சட்டத்தில் சேர்க்கப்படாதது ஏன்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: