யூனியன் பிரதேசமாக பிரிந்த நிலையில் ஜம்முவில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றிவைப்பு

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், முதன் முறையாக ஜம்முவில் அம்மாநில கவர்னர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.நாடு முழுவதும் நேற்று குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அது ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த பிரிப்புக்கு முன்பு இரு  யூனியன் பிரதேசங்களிலும் நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஜம்முவில் துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். காஷ்மீரில் நடந்த மற்றொரு விழாவில் கவர்னரின் ஆலோசகர் பரூக் கான் தேசியக்கொடியை ஏற்றி வைத்து,  அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பனிபோர்த்திய லடாக் மலையில் எல்லை பாதுகாப்பு படையினர் தேசியக் கொடியை ஏற்றினர். இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரில் அவந்திபோராவில் நடந்த மோதலின் போது, ஜெய்ஷ்-இ-முகமது தளபதி காரி யாசிர் உட்பட மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக  காஷ்மீர் மண்டல காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், ‘தீவிரவாதிகள் புர்ஹான் ஷேக், மூசா என்கிற அபு உஸ்மான் மற்றும் தளபதி காரி யாசிர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் வசிப்பவர்கள் என  அடையாளம் காணப்பட்டது. லெத்போரா குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: