×

வேளாண் மண்டலமாக டெல்டாவை அறிவிக்காதது ஏன்?: பி.கே.தெய்வசிகாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க தலைவர்

மத்திய அரசு இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்து இருப்பது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்கிற பழமொழி தான் ஞாபகம் வருகிறது. எதையும் கேட்க வேண்டிய நிலை இல்லை என்று ஆகி விட்டது. ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்காக இந்த அரசிதழில் சொல்லவில்லை. ஹைட்ரோ கார்பன் ஆய்வு செய்யத்தான் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. மக்கள் கருத்து கேட்க வேண்டியதில்லை என்று இந்த உத்தரவில் சொல்லியிருக்கின்றனர். இப்படி ஆய்வு செய்து எண்ணெய் இருக்கிறது என்று தெரிந்த பிறகு, அந்த இடத்தில் எண்ணெய் வளம் இவ்வளவு இருக்கிறது என்று கூறி அனுமதி கொடுத்து தான் ஆக வேண்டும் என்று நெருக்கடியை உருவாக்குவதற்கு இந்த பி பிரிவில் சேர்த்துள்ளனர். பி பிரிவில் இருந்தால் மாநில அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். ஏ பிரிவில் இருந்தால் மத்திய அரசு தான் முடிவு செய்யும்.

ஹைட்ரோ கார்பன் சோதனையை டெல்டா மண்டலத்தில் தான் எடுக்கின்றனர். மற்ற இடங்களில் அவர்கள் இந்த சோதனை நடத்தவில்லை. இந்த டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு உள்ளது என்று தெரிந்தும் அவர்கள் ஏன் செய்கிறார்கள் என்ற கேள்வி உள்ளது. மேலும், ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறு எடுப்பது தொடர்பாக இந்த ஆய்வு தேவையா என்பது தான் எங்களது கேள்வி. இந்தியாவில் எங்கு எண்ணெய் வளம் இருக்கிறது என்பது தொடர்பாக நமது அரசாங்கத்திடம் ஆய்வு முடிவுகள் இருக்கிறது. டெல்டா மண்டலத்தில் எங்கு வளம் இருக்கிறது என்று அறிக்கை உள்ளது. அப்படியிருந்தும் ஏன் ஆய்வு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. யாருடைய கருத்தையும் கேட்காமல் ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகள் அமைத்து எடுக்க வேண்டும் என்பதில் மறைமுகமாக உறுதியாக உள்ளனர். இது, ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இந்த  புதிய அறிவிப்பின் மூலம் மீண்டும் பிரச்னையை பெரிதாக்க அரசு விரும்புகிறது. தமிழக அரசும் இது பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று மாநில அரசு கூறுகிறது. ஆனால், அவர்கள் டெல்டா மண்டலத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்காமல் உள்ளனர். வெறும் அறிக்கையாக உள்ளதே தவிர செயல்பாட்டில் மாநில அரசும் இல்லை. ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில், அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கிற வேலையில் மத்திய அரசு செயல்படுகிறது. இவர்களுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த அவர்களே நம்மை தூண்டி விடும் வேலையை மத்திய அரசு செய்கிறது. இது, பெரும் பிரச்னையாக மாற வாய்ப்புள்ளது. ஈரோட்டையோ, காஞ்சிபுரத்தையோ வேளாண் மண்டலமாக அரசு அறிவித்தால், அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு விவசாயி பொருளாதார மதிப்பு நிலத்தின் மதிப்பை வைத்து தான் அமைகிறது. காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் ஒரு கோடி என்றால் தஞ்சையில் ஒரு ஏக்கர் ஒரு லட்சம் தான். வேளாண் மண்டலமாக அறிவித்தால் தஞ்சையில் ஒரு ஏக்கர் ₹50 ஆயிரமாக கூட குறைய வாய்ப்புள்ளது.

காரணம், வேளாண் மண்டலமாக அறிவித்தால், விவசாயத்தை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. தொழிற்சாலை கட்ட முடியாது. வணிக பகுதியாக மாற்ற முடியாது. இதையெல்லாம் மீறி டெல்டா மக்கள் நாங்கள் எங்களது மண்ணில் விவசாயம் தான் செய்யப்போகிறோம். இங்கு எண்ணெய் வளம், ஹைட்ரோ கார்பன் வளம் மத்திய அரசை சார்ந்துள்ள கார்ப்பரேட் முதலாளிகள் கண்ணை உறுத்துகிறது. அவர்கள், இதை அபகரிக்க வேண்டும். கொள்ளையடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

Tags : Delta ,Agricultural Zone ,Federation ,Thevasikamani ,Farmers' Societies ,Tamil Nadu , Thevasikamani, Federation President , Tamil Nadu , Farmers' Societies
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!