குடியரசு தினவிழாவில் பதற்றம்: அசாமில் 5 இடத்தில் குண்டுகள் வெடிப்பு

கவுகாத்தி: குடியரசு தின கொண்டாட்டத்துக்கு இடையே, அசாம் மாநிலத்தில் 5 இடத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.நாடு முழுவதும் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் அசாமில் நேற்றும் திப்ரூகார் மாவட்டத்தில் 2  குண்டுகளும், சராய்தேவில் ஒரு குண்டும் வெடித்தன. இவை அடுத்தடுத்து 10 நிமிட இடைவெளியில் வெடித்தன. இருப்பினும், அதிருஷ்டவசமாக இந்த குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. அடுத்தடுத்த இந்த குண்டுவெடிப்புகளால்  பெரும் பதற்றம் ஏற்பட்டது. திப்ரூகார் கிரஹாம் பஜாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்:37க்கு அருகிலுள்ள ஒரு கடையில் இந்த குண்டு வெடித்தது.

 2வது குண்டு அசாமின் சராய்தேவ் மாவட்டத்தின் சோனாரி பகுதியில் நடந்தது. இதுதவிர, திப்ரூகரில் ஒரு குருத்வாரா  அருகே ஒரு குண்டுவெடிப்பும் நடந்துள்ளது. மேலும், திப்ரூகரில் துலியாஜன் காவல் நிலையம் அருகே மற்றொரு குண்டும் வெடித்தது.

மற்ற இரண்டு குண்டு வெடிப்புகள் தின்சுகியா மாவட்டத்தின் டும்டூமா நகரத்திலும், சரைடியோ மாவட்டத்தின் சோனாரி நகரத்திலும் நடந்தன. திப்ரூகரில், போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அசாம் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்த் கூறுகையில், ‘‘திப்ரூகர், சராய்தேவ் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்பது குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. அவை கையெறி குண்டுகளாக இருக்க வாய்ப்புள்ளது. குறைந்த திறன் உடைய குண்டுகளை பயன்படுத்தி உள்ளனர். தடயவியல் வல்லுனர்கள் சம்பவ  இடங்களில் விவரங்களை சேகரித்து வருகின்றனர்’’ என்றார். இச்சம்பவம் குறித்து, அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறுகையில், ‘‘ஒரு சிறப்பான நாளில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள கோழைத்தனமான முயற்சி. அசாமின் ஒரு சில இடங்களில் நடந்த வெடிகுண்டு வெடிப்பை கடுமையாக  கண்டிக்கிறேன்.

தீவிரவாத குழுக்கள் மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள சிலர் தங்களது விரக்தியை வெளிப்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று  தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட கிளர்ச்சிக் குழுவான யுனைடெட் லிபரேஷன் ப்ரண்ட் ஆப் அசாம் (இன்டிபென்டன்ட்) (உல்பா- I)  குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.  மேலும், குடியரசு தின கொண்டாட்டங்களில் பொதுமக்கள் எவரும் பங்கேற்க வேண்டாம் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது. அதையடுத்து, அந்த அமைப்பை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: