9 வயது மாணவி பலாத்காரம் பள்ளி தலைமையாசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை: காசர்கோடு நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே 9 வயதான 4ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும்  விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் காசர்கோட்டில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜன் நாயர் (58). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவியை  வகுப்பறையில் வைத்து பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காசர்கோடு போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜன் நாயரை கைது செய்தனர்.

Advertising
Advertising

இந்த வழக்கு காசர்கோடு கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிகுமார், தலைமை ஆசிரியர் ராஜன் நாயருக்கு 20 ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து  உத்தரவிட்டார்.

இது தவிர பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதுபோன்ற வழக்குகளில் நஷ்டஈடு தொகையை நீதிமன்றம் நிர்ணயித்து உத்தரவிடுவது மிக அபூர்வமாகும். பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்படும். அதன்படி மாவட்ட சட்ட மையம் ஆலோசித்து எவ்வளவு  நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும். இந்த தொகை பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்க பல ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் நீதிமன்றமே நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மாதத்திற்குள் ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: