×

கொடி ஏற்றுவதுடன் நில்லாமல் போராட்டத்தையும் தீவிரப்படுத்துவோம்: ப.சிதம்பரம் அழைப்பு

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அரசியலமைப்பின் 3வது பிரிவில் கூறப்பட்டுள்ள சுதந்திரம் உறுதிப்படுத்தபடுவதில் தான் அரசியலமைப்பின் உயிர் துடிப்பு அடங்கி உள்ளது. இந்த சுதந்திரம் மக்களுக்காக வழங்கப்பட்டது. இதனை எந்த அரசாலும் பறிக்க முடியாது. இந்நாளில் எந்தவித குற்றமும் செய்யாமல், கடந்த 6 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் உள்பட, தங்களின் சுதந்திரத்தை பறி கொடுத்த 70 லட்சம் காஷ்மீர் மக்களை நினைவு கூர்கிறோம். இவை அனைத்திற்கும்  மேலாக, தேசத் துரோகம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் தங்களுக்கு எதிராக போராடுபவர்கள் மீது இந்த சர்வாதிகார அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டின் எந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் சுதந்திரம் மறுக்கப்படும் போது, அது நாடு முழுவதற்குமான சுதந்திரம் மறுக்கப்படுவதாகதான் அர்த்தம். இந்த குடியரசு நாளில் கொடி ஏற்றுவதுடன் மட்டும் நில்லாமல், போராட்டத்தின்  தீவிரத்தையும் உயர்த்துவோம்.இந்தியா ஒரு குடியரசு. முடியரசு அல்ல. யாருக்கும் இங்கு முடி சூட்டப்படவில்லை. அதனால் யாரும் இங்கு மன்னர் இல்லை. பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி குளறுபடி, சிஏஏ ஆகியவை சர்வாதிகார அரசனை  நினைவுபடுத்துகின்றன. இந்திய குடியரசை மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமோ? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : P. Chidambaram , We will intensify the struggle without flag raising: P. Chidambaram call
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...