காப்பான் பட பாணியில் பயங்கரம்: குஜராத், ராஜஸ்தானில் ருசிகண்ட வெட்டுக்கிளிகள் பஞ்சாப்பிற்கு குறி: அஞ்சி நடுங்கும் விவசாயிகள்

அமிர்தசரஸ்: குஜராத், ராஜஸ்தானில் பயிர்களை அழித்த வெட்டுக்கிளிகள் அடுத்ததாக பஞ்சாப்பை குறிவைத்து பறந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். காப்பான் படத்தில் வரும் காட்சியைப் போன்று லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தற்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை நோக்கி படையெடுத்துள்ளன. இவை குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டிருந்த  பயிர்களை நாசம் செய்தன. சில மணி நேரங்களிலேயே இவை பயிர்களை நாசம் செய்த காட்சிகளை கண்ட விவசாயிகள், அலறித்துடித்தனர். அவற்றை எப்படி விரட்டுவது என்று தெரியாமல் அவர்கள் விக்கித்து நின்றனர்.

பல மாதங்களாக பாடுபட்ட வளர்த்த பயிர்கள், வெட்டுக்கிளிகளால் சில மணி நேரங்களில் நாசமானதை பார்த்தபோது அவர்கள் வடித்த கண்ணீர் கொஞ்சம் நஞ்சமன்று. இந்நிலையில், இந்த வெட்டுக்கிளிகள் இப்போது பஞ்சாப்பை குறிவைத்து பறந்து வருகின்றன.

பஞ்சாப்பின் பாஷில்கா, முக்த்சார், படிண்டா ஆகிய மாவட்டங்களில் பல இடத்தில் இந்த வெட்டுக்கிளிகள் பயிர்களில் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளன. இதனால் அம்மாவட்ட விவசாயிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். படையெடுத்து  வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை தடுக்க தங்களுக்கு உரிய வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பது எப்படி?

பயிர்களில் வெட்டுக்கிளிகள் தாக்கம் தென்பட்டால் உடனடியாக, குயினால்பாஸ் 0.05 சதவிதம் (அ) மாலத்தியான் 0.1 சதவிதம் (அ) கார்பரில் 0.2 சதவிதம் கலந்து பயிரில் தெளித்தால் செடிகளை பாதுகாக்க முடியும் என்று வேளாண்துறை  தொழில்நுட்ப இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாற்றங்கால்களில் வலை போட்டு வைத்தாலும் பாதுகாக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: