×

இந்தியாவிற்கே எடுத்துக் காட்டாக திகழ்கின்றனர் விவசாயி தினேஷ், சிறுமி பூர்ணாவுக்கு ‘மன் கி பாத்’தில் பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: பயன்படாத ஆழ்துளை கிணறை மழைநீர் சேகரிப்புக்கு பயன்படுத்தும் யோசனையை தந்த தமிழக விவசாயி தினேஷும், ‘கெலோ இந்தியா’ விளையாட்டில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற சிறுமி பூர்ணாவும் மிகச்சிறந்த உந்து  சக்தியாக திகழ்வதாக ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று காலை அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி  வருகிறார். 2020ம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ குடியரசு தினத்தையொட்டி, நேற்று காலை 11 மணிக்கு பதிலாக 6 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு மக்கள் தங்கள் தகவல்களை எளிதாகவும்,  சிறப்பாகவும் பகிர்வதற்கும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும், இணைந்து முன்னேறுவதற்குமான தளமாக மன் கி பாத் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பல விஷயங்கள் மக்கள் இயக்கமாக வடிவெடுத்துள்ளது. எந்தவொரு சமூகப் பிரச்னையிலும் மக்கள் அனைவரும் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 130 கோடி இந்தியர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால்,  நாடு 130 அடி முன்னெடுத்து வைத்து முன்னேறும். நாட்டு மக்களின் சாதனைகளை நினைவுகூரவும் இந்நிகழ்ச்சி ஓர் வாய்ப்பை வழங்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து மழைநீர் சேகரிப்புக்கு ஒரு ஆழ்துளை கிணற்றை பயன்படுத்துவதற்கான மிகவும்  புதுமையான யோசனை வந்திருக்கிறது. (திருவையாறு அருகே உள்ள அம்மையாகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தினேஷ் தனது விவசாய நிலத்தில் பயன்படுத்தாத ஆழ்துளை கிணற்றை மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றியதை  பிரதமர் குறிப்பிட்டார்). இதுபோன்ற நீர் பாதுகாப்பு குறித்த முன்மாதிரி யோசனைகள் புதிய இந்தியாவின் தீர்மானங்களுக்கு அதிக வலு சேர்க்கிறது.

கடந்த 22ம் தேதி, 3வது ‘கெலோ இந்தியா விளையாட்டு’ அசாமின் கவுகாத்தியில் நிறைவடைந்தது. இந்த விளையாட்டுகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். வெறும் 3 ஆண்டுகளில், ‘கெலோ இந்தியா  கேம்ஸ்’ மூலம், 32,000 குழந்தைகள் பரிசு பெற்றுள்ளனர். இந்த குழந்தைகளில் பலர் பற்றாக்குறை மற்றும் வறுமைக்கு மத்தியிலும் சாதித்துள்ளனர். உதாரணமாக, தமிழகத்தை சேர்ந்த பீடி தொழிலாளி யோகானந்தனின் மகள் பூர்ணா பளு  தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் அனைவரின் இதயத்தையும் வென்றுள்ளார்.

இதேபோல் துப்புரவு தொழிலாளியின் மகன், மகள் என சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் வறுமையை வென்று வெற்றியை நிலைநாட்டி உள்ளனர். வறுமை தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு தடையாக மாற அனுமதிக்காத அந்த  பெற்றோர்களையும் கவுரவித்து, மக்கள் அனைவர் சார்பாக  தலை வணங்குகிறேன்.இந்த புதிய தசாப்தம் உங்கள் ஒவ்வொருவருக்கும், நாட்டிற்கும் புதிய தீர்மானத்தையும் புதிய சாதனைகளையும் கொண்டு வரட்டும். புதிய தசாப்தத்தைத்  தொடங்குவோம். புதிய தீர்மானத்துடன் நாட்டிற்கு சேவை செய்வோம். இவ்வாறு மோடி பேசினார்.

‘வன்முறையும், ஆயுதமும் தீர்வாகாது’

‘மன் கி பாத்’தில் பிரதமர் மேலும் பேசுகையில், ‘‘மற்றொரு மகிழ்ச்சியான விஷயம், வடகிழக்கில் கிளர்ச்சி கணிசமாகக் குறைந்து விட்டது என்பதுதான். இந்த பிராந்தியத்தின் ஒவ்வொரு பிரச்சினையும் நேர்மையாகவும், அமைதியாகவும்  பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது. வன்முறையும், ஆயுதமும் எப்போது ஓர் பிரச்னைக்கு தீர்வாக அமையாது. பிரமாண்டமான ‘கெலோ இந்தியா’ விளையாட்டுகளை வெற்றிகரமாக நடத்திய அசாம், மற்றொரு பெரிய சாதனைக்கு  சாட்சியாக இருந்தது. 8 வெவ்வேறு போராளி குழுக்களை சேர்ந்த 644 தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்,’’ என்றார்.



Tags : Farmer Dinesh ,Purna ,Mann Ki Baat' Dinesh , Dinesh, Farmer Dinesh, Prime Minister congratulates Purna
× RELATED குடிசைவாழ் மாணவிகளுக்கும்...