ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் குவித்தோவா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால்  இறுதியில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியுடன் நேற்று மோதிய குவித்தோவா 6-7 (4-7) என்ற கணக்கில் முதல்  செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடிய அவர் 6-3, 6-2 என வென்று கால் இறுதிக்கு  முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 12 நிமிடத்துக்கு நடந்தது. மற்றொரு 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) 6-3, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் அலிசான் ரிஸ்கியை  (அமெரிக்கா) வீழ்த்தினார். அமெரிக்க சிறுமி கோகோ காப் (15 வயது) தனது 4வது சுற்றில் சக வீராங்கனை சோபியா  கெனினிடம் 7-6 (7-5), 3-6, 0-6 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார். துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியர் 7-6 (7-4), 6-1  என்ற நேர் செட்களில் கியாங் வாங்கை (சீனா) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில்  அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர்  தனது 4வது சுற்றில் 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்டன் புக்சோவிக்சை வென்றார்.  கனடா வீரர் மிலோஸ் ரயோனிச் 6-4, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி கால் இறுதிக்கு  முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் பேபியோ பாக்னினியுடன் (இத்தாலி) மோதிய அமெரிக்க வீரர் டென்னிஸ்  சாண்ட்கிரன் 7-6 (7-5), 7-5, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி, 27 நிமிடம் போராடி வென்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - நடியா கிச்சனோக் (உக்ரைன்) ஜோடி 6-4, 7-6 (7-4)  என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் நிக்கோல் மெலிச்சார் - புரூனோ சோரெஸ் (பிரேசி) ஜோடியை வீழ்த்தியது. முதல்  சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜெலினா ஆஸ்டபென்கோ (லாத்வியா) இணை 6-7 (4-7), 6-3, 10-6 என்ற  செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோர்ம் சாண்டர்ஸ் - மார்க் போல்மன்ஸ் ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு  முன்னேறியது.

Related Stories: