நிறுவன ஊழியர்கள் பான், ஆதார் தராவிட்டால் 20% டிடிஎஸ் பிடித்தம்: மத்திய நேரடி வரிகள் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: பான் எண், ஆதார் எண் வழங்காவிட்டால், சம்பளத்தில் 20 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என  வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஊழியர்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப, நிறுவனங்கள் டிடிஎஸ் பிடித்தம் செய்கின்றன. வரி செலுத்தும் பெரும்பாலான  ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தில் பான் எண் கொடுத்திருப்பார்கள். இந்நிலையில், வருமான வரி சட்ட விதிகளில் புதிய  திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியர்கள் தங்களது பான் எண் அல்லது ஆதார் எண் வழங்கியிருக்கா விட்டால், வரி  விதிக்கக்கூடிய ஊழியர்களின் வருவாயில் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும்.

இந்த விதி கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் சுற்றிக்கை  அனுப்பியுள்ளது. அதில், ஊழியர்களின் சம்பளத்தில் 20 சதவீத டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும். அவ்வாறு 20 சதவீத  டிடிஎஸ் பிடித்தம் செய்திருந்தால், கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக 4 சதவீத செஸ் வரி பிடித்தம் செய்ய தேவையில்லை.   டிடிஎஸ் பிடித்த செய்த பிறகு, நிறுவனங்கள் தாங்கள் சமர்ப்பிக்கும் 24கியூ படிவத்தில் ஊழியர்களின் சரியான பான் எண்  மற்றும் ஆதார் எண் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் எனவும், மத்திய நேரடி வரிகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருந்தால், வரி பிடித்தம் தேவையில்லை. அதற்கு மேல் இருந்தால் சராசரியாக 20  சதவீத டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.  ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவோர், வருமான வரி செலுத்த   வேண்டும். வீட்டு கடன், காப்பீடு, சேமிப்பு திட்டம் உள்ளிட்ட வருமான வரி  சலுகைக்கான திட்டங்களில் முதலீடு  செய்திருந்தால் மட்டுமே இதில் இருந்து  தப்பிக்கலாம்.

Related Stories: