ரூ.2 லட்சம் கோடி துண்டு விழுது வருமான வரி உச்சவரம்பு உயர வாய்ப்பு மிகக்குறைவு

புதுடெல்லி: மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளதால், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு  பட்ஜெட்டில் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மாதம் 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட  உள்ள சலுகைகள், திட்டங்கள் தொடர்பாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு  உயர்த்தப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஏனெனில், 2014-15 நிதியாண்டுக்கு பிறகு எந்த மாற்றமும்  இன்றி, ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பே நீடித்து வருகிறது. தற்போது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5  லட்சம் வரை 5 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இது பட்ஜெட்டில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை என உயர்த்தப்படலாம்  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதாவது, 5 சதவீத வரி விதிக்கப்படும் இந்த வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம்.  இதுபோல் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத வரி, ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம்  வரை ரூ.20 சதவீத வரி நிர்ணயிக்கலாம். மேலும், ரூ.20 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை வருவாய் உள்ளவர்களுக்கு 30 சதவீத  வரி, ரூ.10 கோடிக்கு மேல் இருந்தால் 35 சதவீத வரி நிர்ணயிக்கப்படலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன என்று  கூறப்பட்டது. ஆனால், உச்சவரம்பு உயர்த்தப்படுவது சந்தேகம்தான் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது  குறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது: வரி வருவாயை அதிகரிக்க செய்வதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில் மத்திய  அரசுக்கு வரிகள் மூலமாக கிடைக்க வேண்டிய வருவாய் சுமார் ரூ.2 லட்சம் கோடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு, பெரு நிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை  குறைத்தது. அதாவது, பெரு நிறுனங்களுக்கான வரி ஏற்கெனவே உள்ள நிறுவனங்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து 22  சதவீதமாகவும், அக்டோபர் 1 2019க்கு பிறகு தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு வரி 25 சதவீதத்தில் இருந்து 15  சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

இவை 2023 மார்ச் 31க்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும். இது கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வரி  குறைப்பாகும். இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர, வெளிநாட்டு  நிறுவன முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கான வரியையும் ரத்து செய்தது.  இதன்மூலம் அரசுக்கு ரூ.1,400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில்கள் முடங்கி கிடப்பதால், ஜிஎஸ்டி வருவாய் நிர்ணயித்த இலக்கை  விட ரூ.50,000 கோடி குறைவாக வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த வகையில் கணக்கிட்டாலும், நேரடி மற்றும்  மறைமுக வரி வருவாயில் மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.2.5 லட்சம் கோடி வரை வருவாய்  இழப்பு ஏற்படும் என எஸ்.சி.கார்க் உட்பட பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பொருளாதார மந்த  நிலையில் இருந்து மீளவும், வருவாயை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு  உள்ளது. எனவே, வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுவதற்கு  வாய்ப்புகள் மிகவும் குறைவு என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* பொருளாதார மந்த நிலையால் தொழில்கள் முடங்கியதால் மறைமுக வரி வருவாய் மற்றும் நேரடி வரி வருவாயில் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

* நிபுணர்களின் கணிப்புப்படி, நடப்பு ஆண்டில் வரி வருவாய் மத்திய அரசு இலக்கை விட ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.2.5 லட்சம்  கோடி வரை குறையும்.

* நிதி பற்றாக்குறையை சமாளிக்க வருவாயை உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலையில் மத்திய அரசு உள்ளது.

Related Stories: