ஏப்ரல் - டிசம்பரில் தங்கம் இறக்குமதி 6.77 சதவீதம் சரிவு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் தங்கம் இறக்குமதி  6.77 சதவீதம் சரிந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. சமீப காலமாக  தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. எனினும், பணப்புழக்கம் குறைவாக உள்ளதாலும், பொருளாதார மந்தநிலையால் வேலையிழப்பு காரணமாகவும் தங்கத்தின்  தேவை குறைந்து, உள்நாட்டில் நகை விற்பனை மந்தமாகவே உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 2,300  கோடி டாலர் (சுமார் ₹1,63,300 கோடி) மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தை ஆண்டு இதே  காலக்கட்டத்தில் இறக்குமதி 2,473 கோடி டாலராக (சுமார் ரூ.1,75,583 கோடி) இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி  6.77 சதவீதம் சரிந்துள்ளது.

 தங்கம் இறக்குமதி கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும் பண்டிகை சீசனை  முன்னிட்டு கடந்த அக்டோபர், நவம்பரில் இறக்குமதி சற்று உயர்ந்தது. மீண்டும் டிசம்பரில் 4 சதவீதம் சரிந்தது. அளவில்  தங்கம் இறக்குமதியில் 2வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இங்கு ஆண்டுக்கு சுமார் 800 டன் முதல் 900 டன் வரை  தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.  தங்கம் இறக்குமதி அதிகரிப்பால் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க, இறக்குமதி வரியை 10 சதவீதத்தில்  இருந்து 12.5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இறக்குமதி குறைய இதுவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.  மேற்கண்ட காலக்கட்டத்தில் ஆபரண ஏற்றுமதியும் 6.4 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இறக்குமதி வரியை 4  சதவீதமாக குறைக்க வேண்டும் என நகை தொழில் துறையினர் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: