×

தேனி பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பால் நெரிசல்: கலெக்டர் கவனிப்பாரா?

தேனி: தேனியில் உள்ள பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி நகரின் மத்தியில் பழைய பஸ்ஸ்டாண்ட் உள்ளது. தேனி வழியாக போடி, கம்பம், குமுளி, மூணாறுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த பஸ்ஸ்டாண்டிற்கு வந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதேபோன்று போடி, கம்பம், குமுளி, மூணாறில் இருந்து தேனி வழியாக திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும், இந்த இங்கு வந்து செல்கின்றன.

இதனால் தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் எப்போதும் போக்குவரத்து மிகுந்ததாக உள்ளது. இந்த பஸ்ஸ்டாண்ட்டின் மேற்குப்புற வாயில் வழியாக தேனிக்கு வரும் பஸ்களும், தேனியில் இருந்து  போடி, கம்பம், குமுளி, மூணாறு வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் செல்கின்றன. இந்த வாயில்பகுதி சுமார் 20 அடி அகலம் கொண்டது. இந்த வாயில் பகுதியை ஆக்கிரமித்து ஏற்கனவே ஏராளமான பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நீண்ட தூரத்திற்கு ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எதிர் திசையில் உள்ள செயற்கை நீறூற்றின் அருகில் பொதுமக்கள் தங்கள் டூவீலர்களை வரிசையாக நிறுத்தி ஆக்கிரமிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. பஸ்ஸ்டாண்டை விட்டு பஸ்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. பயணிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனை போக்குவரத்து போலீசார் கண்டும், காணாமல் உள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Theni ,bus stand ,bus stand area , Theni, busstand, congestion
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...