×

உழவர்சந்தையை ஒட்டி பூங்கா கட்டியே தீருவோம் நெல்லை வேளாண்மை துறை மாநகராட்சி அக்கப்போர்: போக்குவரத்து நெரிசலில் திணறும் மக்கள்

நெல்லை: தமிழகத்திலேயே முதல் 10 இடங்களை பிடித்துள்ள உழவர் சந்தைகளில் ஒன்றாக திகழும் நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தையை சுற்றிலும் உள்ள காலி நிலத்தில் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் திணறுகின்றனர். தமிழகத்தில் உழவர்கள் தங்களது விளைநிலங்களில் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை தாங்களே விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பாளையங்கோட்டை மகாராஜநகர், மேலப்பாளையம், கண்டியப்பேரி, சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய 6 இடங்களில் உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
பாளை. மகாராஜநகர் உழவர்சந்தை கடந்த 2000ம் ஆண்டு ஜன.2ம் தேதி துவங்கப்பட்டது.

இதற்காக தியாகராஜநகர் ரயில்வே கேட்டிற்கு 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாக உள்ள காலி நிலத்தில் 70 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கு 100 கடைகள் அமைக்கப்பட்டன.  இந்த உழவர் சந்தையின் மூலம் தினமும் நாள் ஒன்றுக்கு 25 டன் காய்கறிகள், அதாவது ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வியாபாரம் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நாட்களில் 30 டன் காய்கறிகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.10 லட்சத்திற்கு வியாபாரம் நடைபெறும். திருமண நாட்கள், பண்டிகை நாட்களில் வியாபாரம் அதிகமாக இருக்கும். சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் சிறப்பு விற்பனை நடந்தது. இந்த 4 நாட்களில் மட்டும் 300 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.

இந்த உழவர் சந்தையின் மூலம் இதுவரை 500 விவசாயிகளுக்கு உழவர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 428 விவசாயிகள் தொடர்ந்து வருகின்றனர். 100 விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உழவர் சந்தைக்கு சிவந்திப்பட்டி,  ராஜகோபாலபுரம், முத்தூர், மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, மணக்கரை,  வல்லநாடு, செய்துங்கநல்லூர், கருங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து  விவசாயிகள் தினமும் தங்களது காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.  மலை காய்கறிகள் கொடைக்கானல் மண்ணவனூர் பகுதியில் இருந்து வருகிறது.  இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கும், தேனி மாவட்ட விவசாயி ஒருவருக்கும் உழவர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் விவசாயிகள் உழவர் சந்தையை சுற்றிலும் உள்ள இடங்களில் அமர்ந்து தங்களது காய்கறிகளை விற்றுச் செல்கின்றனர்.

இங்கு நயினார்குளம் மொத்த மார்க்கெட் விலையை விட காய்கறிகளின் விலை 15 சதவீதம் அதிகமாகவும், சில்லறை மார்க்கெட் விலையை விட 20 சதவீதம் விலை குறைவாகவும் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளும் பலன் பெறுவதுடன் பொதுமக்களும் பயன் பெறுகின்றனர். அனைத்து விவசாயி களுக்கும் எலக்ட்ரானிக் தராசு, முழுவதும் சிசிடிவி கேமரா வசதி என ஹைடெக் வசதியுடன் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் முதல் 10 உழவர் சந்தைகளில் ஒன்றாக மகாராஜநகர் உழவர் சந்தை திகழ்கிறது. உழவர்சந்தையின் தென்புறத்தில் சாலை விசாலாமாக இருந்தது. ஆனால் தியாகராஜநகர் ரயில்வே கேட்டின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் இருபுறமும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஒரு புற சர்வீஸ் சாலையை ஒட்டி உழவர் சந்தையின் பிரதான நுழைவாயில் உள்ளது. பாலம் அமைந்ததால் இந்தச் சாலை மிகவும் குறுகி ஒடுங்கி விட்டது. இதனால் காலை, மாலை நேரங்களில் உழவர் சந்தைக்கு வந்து, செல்வோர் கூட்டம், வாகனங்கள் நெரிசல் என அந்தப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மேற்குப்புற வாயிலை பயன்படுத்தி வந்தனர். மேற்குப்புற வாயில் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் வியாபாரிகள் தங்களது ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை நிறுத்தி காய்கறி இறக்குவதற்கும் வசதியாக இருந்தது. இந்த காலியிடம் நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமானதாகும். இந்த இடத்தின் வெளிப்புறத்தில் 3 திசைகளிலும் வணிக வளாகம் உள்ளது. பின்புறத்தில் உழவர் சந்தை உள்ளது.

நடுவே உள்ள காலி நிலத்தில் தான் உழவர் சந்தை வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களது வாகனங்களை நிறுத்தி வந்தனர். பிரதான வாயில் பகுதியில் பாலம் அமைந்து விட்டதால் மேற்கு பகுதி நுழைவாயில் பொதுமக்கள், வியாபாரிகள் அனைவருக்கும் பார்க்கிங் வசதியாக இருந்தது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அந்த காலி இடத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்து உழவர் சந்தை மேற்கு நுழைவாயிலை ஒட்டி வாணம் தோண்டி சுற்றுச்சுவரும் எழுப்பி விட்டது. இதனால் கார் உள்ளிட்ட வாகனங்களில் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பூங்காவிற்காக எழுப்பியுள்ள சுற்றுச்சுவர், உழவர் சந்தை சுற்றுச்சுவருக்கு இடையே உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

இதனால் பிரதான நுழைவாயில், மேற்கு நுழைவாயில் ஆகிய இரு பகுதிகளிலும் மகாராஜநகர் உழவர் சந்தை நெருக்கடியை சந்தித்துள்ளது. சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடந்த போது 4 நாட்களும் அந்த பகுதியில் வாகன நெரிசல், போக்குவரத்து நெரிசல் என பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உருவானது. பூங்காக்களை பொறுத்தவரை மகாராஜநகரில் அருகருகே பல பூங்காக்கள் அமைந்துள்ளன. உழவர் சந்தைக்கு அருகே உள்ள இடத்தில் தான் பூங்கா அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உழவர் சந்தை ெநல்லை வேளாண்மை விற்பனைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பூங்கா அமைப்பதை அறிந்த வேளாண்மை விற்பனைத் துறையின் துணை இயக்குநர், மாநகராட்சி காலி இடத்தை உழவர் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி பார்க்கிங் வசதிக்கு ஒதுக்க வேண்டும்.

அதில் பூங்கா அமைத்தால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். எனவே மாநகராட்சி தனது திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் பூங்கா கட்டியே தீருவோம் என பிடிவாதம் காட்டி வருகிறது. இதுகுறித்து உழவர் சந்தை வியாபாரி மகாராஜன் கூறுகையில், உழவர் சந்தையின் மேற்குப்புற நுழைவாயில் விவசாயிகள் லோடு ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் காய்கறிகளை கொண்டு வந்து இறக்குவதற்கு வசதியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை நாட்களில் 50க்கும் மேற்பட்ட கார்களில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து செல்வர். அவர்கள் பார்க்கிங் செய்ய மேற்கு நுழைவாயில் வசதியாக இருந்தது. தற்போது பூங்கா சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டதாலும், பிரதான நுழைவாயில் அருகே பாலம் கட்டப்பட்டதாலும் பார்க்கிங் வசதியின்றி உள்ளது.

பலர் திறக்காத பாலத்தின் முன்பாக தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்தி விட்டு வருகின்றனர். தியாகராஜநகர் பாலம் திறந்து விட்டால் அங்கும் நிறுத்த முடியாது. எனவே உழவர் சந்தையை சுற்றிலும் பூங்கா அமைக்கும் முடிவை மாநகராட்சி கைவிட வேண்டும் என்றனர். பொதுமக்கள் வந்து காய்கறி வாங்கி செல்லும் இடம் தான் உழவர் சந்தை. அந்த சந்தைக்கு வரும் பொதுமக்கள், வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி செய்து தருவது நெல்லை மாநகராட்சியின் கடமையாகும். அதை விடுத்து இந்த காலி இடத்தில் தான் பூங்கா அமைப்போம் என மாநகராட்சி பிடிவாதம் செய்வது ஸ்மார்ட்சிட்டி என்ற கம்பீரத்துடன் நடைபோடும் நெல்லை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்கின்றனர் உழவர்சந்தை வாடிக்கையாளர்கள்.

முதல் குரல் கொடுத்தேன்
பாளை. தொகுதி எம்எல்ஏ டிபிஎம் மைதீன்கான் கூறுகையில், மகாராஜநகர் உழவர்சந்தை 2000ல் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளை கடந்தும் அனைத்து மக்களுக்கும் நல்ல முறையில் மகாராஜநகர் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்த உழவர் சந்தையை சுற்றிலும் பூங்கா அமைக்க மாநகராட்சி முயற்சித்த போது தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் முதல் குரல் கொடுத்தேன். காலி இடத்தில் பூங்கா கட்டக் கூடாது. பார்க்கிங்கிற்கு ஒதுக்க வேண்டும் என நெல்லை மாநகராட்சியிடம் மனு அளித்தேன். பொதுமக்களின் வசதியை கருதாமல், மக்கள் பிரதிநிதியின் கோரிக்கையை ஏற்காமல் தற்போது மாநகராட்சி பூங்கா அமைப்பதற்கான சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே மாநகராட்சி கமிஷனர் அந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து அந்த இடத்தில் பூங்கா தேவை தானா என்பதை உணர்ந்து காலி இடத்தை தொடர்ந்து உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்களின் பார்க்கிங்கிற்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

மாநகராட்சி இடத்தை பாதுகாக்கிறோம்
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மகாராஜநகர் உழவர்  சந்தை அருகே தற்போது பூங்காவுக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து  சமூக விரோத செயல்கள் நடந்து வந்தன. அதிலும் இரவு நேரங்களில் அங்கு நடக்கும்  சில சம்பவங்கள் குறித்து எங்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்  அடிப்படையில் அந்த இடத்தை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை  மேற்கொண்டுள்ளோம். அந்த இடத்தில் மாநகராட்சி பூங்கா அமைப்பது  என்பது ஓராண்டுக்கு முன்பே திட்டமிட்டதாகும். பூங்கா அங்கு அமைந்தாலும்  உழவர் சந்தைக்கு வரும் வாகனங்களை நிறுத்த தடை ஏதும் இல்லை. அதற்காக  அப்பகுதியில் இருபக்கமும் 6 மீட்டர் இடைவெளி விட்டே பூங்கா அமைக்க உள்ளோம்.  அந்த இடத்தில் உழவர் சந்தைக்கு வருவோர் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்’’  என்றனர்.

Tags : Paddy Agriculture Department Corporation , Farming, Parks, Paddy Agriculture Department Corporation
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...