×

நாகூர் பட்டினச்சேரி கிராமம் கடலில் மூழ்காமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?... பல ஆண்டுகளாக போராடும் மீனவர்கள் கண்டுகொள்ளாத அரசு

நாகூர் அருகே பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடலில் அரிப்பு ஏற்படுவதால் மீனவர்களின் வீடுகள் மற்றும் தென்னை மரங்கள் கடலுக்குள் இழுத்து செல்வதை தடுக்க கருங்கல் தடுப்புசுவர் அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகாலமாக போராடி வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூர் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் இடையே வெட்டாறு தென்கரையோரத்தில் பட்டினச்சேரி மீனவகிராமம் உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பின்னர் இந்த கிராமத்தில் கடல் நீர் உட்புக தொடங்கியது.

வாஞ்சூரில் தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதன் காரணமாக பட்டினச்சேரி கிராமத்தின் உள்ளே கடல் நீர் புகுவது அதிகமாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவிலான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கடல் நீர் உள்ளே புகாமல் இருக்க கருங்கல் கொண்ட தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த 15 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். ஆனால் இவர்களின் போராட்டத்திற்கு இன்று வரை விடிவுகாலம் பிறக்கவில்லை என்பது தான் உண்மையான சம்பவம்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
நாகரத்தினம்: நாகை மாவட்டம் நாகூர் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் இடையே வெட்டாறு தென்கரையோரமாக இருப்பது தான் பட்டிணச்சேரி கிராமம். இந்த கிராமத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலையின் போது எங்கள் கிராமம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடல் நீர் உட்புகுந்து கரையோரம் இருக்கும் வீடுகளை எல்லாம் காவு வாங்கி வருகிறது. காரைக்கால் அருகே தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதன் மூலம் கடல் அலையின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து எங்கள் மீனவ கிராமத்தின் உள்ளே கடல் நீர் அதிக அளவில் புகுந்து வருகிறது.

இதனால் எங்கள் கிராம பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடல் சீற்றத்தின் போது அதிக அளவிலான கடல் நீர் உயர்வதால் இதுவரை கரையோரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதை தடுக்க சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்று பல முறை தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் பயன் இல்லை. ஒவ்வொரு முறையும் புகார் தெரிவிக்கும் போது அதிகாரிகள் எங்கள் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்வார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

இது வரை எங்கள் கிராமத்தை பார்வையிட 4க்கும் மேற்பட்ட கலெக்டர்கள் 15க்கும் மேற்ட்பட தாசில்தார்கள் வந்துள்ளனர். ஆனால் பயன் இல்லை. தடுப்பு சுவர் அமைத்து தருவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் பாட்டிணச்சேரி கிராமம் ஒன்று இருந்ததாக தெரியாமல் போய்விடும். இதற்கு காரணம் நாளுக்கு நாள் கடல் சீற்றம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கடல் நீர் எங்கள் கிராமத்தின் உள்ளே புகுந்து கொண்டே இருக்கிறது என்றார்.

இளஞ்சியம்: நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் கடல் அரிப்பானது சுனாமிக்கு பின்னர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாகூர் பட்டிணச்சேரி கடற்கரையில் எஞ்சியுள்ள தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து கடல் நீருடன் சென்று அழிந்து வருகின்றது. கடல் அரிப்புக்கும் பாதிப்புக்கும் முக்கிய காரணம் அருகில் உள்ள காரைக்கால் தனியார் துறைமுகம். துறைமுகத்தின் வளர்ச்சிக்காக ஒரு பகுதியில் கருங்கல் கொட்டப்பட்டதால் மறு பகுதியில் 300 மீட்டர் அளவிற்கு கடல் நீர் உள்ளே புகுந்து கடல் அரிப்பு அதிகரித்து விட்டது. இதனால் எங்கள் கிராமம் பாதிக்கப்பட்டது.

எங்கள் கிராமத்தை சேர்ந்த படகுகளை நிறுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மீன்பிடி தொழில் செய்ய முடியாமலும் தவித்து வருகிறோம். கடல் அரிப்பினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் எஞ்சியுள்ள எங்கள் வீடுகளும் கடல் தண்ணீர் உள்ளே சென்று விடும். இதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

கடல் அரிப்பில் இருந்து மீனவர்களை பாதுகாக்க முகத்துவாரத்தின் இரண்டு புறமும் கருங்கல்கள் கொட்டி தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கமுடியும். மாவட்ட நிர்வாகம் இந்த கிராமத்தில் உள்ள முழுமையான தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

இடம் ஆய்வு செய்யப்பட்டது
பிரான்சிஸ்(நாகை தாசில்தார்): நாகூர் பட்டிணச்சேரி மீனவ கிராமத்தினர் கொடுத்த மனு கிடைத்துள்ளது. இது தொடர்பாக கலெக்டர் உத்தரவின் பேரில் சம்பவ இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்களின் கோரிக்கை நியாயமானது. இது குறித்து முழு ஆய்வறிக்கையும் கலெக்டரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம மக்களின் கோரிக்கை விரைவில் தீர்க்கப்படும் என்றார்.

Tags : village ,sea ,Nagore Pattinacheri ,Nagore Patinacherry , Nagore Pattinacherry village, barrier wall, struggling fishermen, Govt
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்