×

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் திண்டிவனம்: ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை திட்டம்... கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் மக்கள் அவதி

விழுப்புரம் மாவட்டத்தில் சென்னை செல்லும் வழியில் உள்ள முக்கிய நகரமாக திண்டிவனம் அமைந்துள்ளது. செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூர், மரக்காணம் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய கோட்டமாகவும், ஒரு சார் ஆட்சியரும் நிர்வாக காரணங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் திண்டிவனம் இன்னமும் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் பகுதியாக இருந்து வருகிறது. திண்டிவனம் நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை கொண்டிருக்கிறது. நகரின் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் மட்டும்  கால்வாய் மிகவும் குறுகலாக உள்ளது. மூடப்படாத இந்த குறுகலான கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

கொசு உற்பத்தி அதிகளவில் உருவாகி டெங்கு, மலேரியா, டைபாய்டு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு பொதுமக்கள் ஆளாகுகின்றனர். சில வீடுகளில் செப்டிக் டேங்க் இல்லாததால் கழிவுகளை நேரடியாக கால்வாயில் விடுவதால் காலை நேரங்களில் கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் கழிவுநீரில் நடந்து செல்லக்கூடிய அவலநிலை தொடர்கிறது. மேலும் திறந்து கிடக்கும்  கால்வாயில் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படுகிறது. எனவே திண்டிவனம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாளசாக்கடை திட்டத்தை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சாரங்கபாணி (ரோஷணை)
திண்டிவனத்தில் அரசியல் தலைவர், முதல் அமைச்சர், மத்திய அமைச்சர் வரை இருந்தும் இதுவரை பேருந்து நிலையம், பாதாள சாக்கடை, வணிக வளாகங்கள், போக்குவரத்து நெரிசல்  உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. திண்டிவனம் நகரப்பகுதியில்  பாதாள சாக்கடை அமைத்தால் சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும்.தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதாலும், கழிவு நீர் கால்வாய்கள் ஆக்கிரமிப்பாலும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி தொற்றுநோய் ஏற்படுகிறது என்றார்.

சேரன்( திண்டிவனம்)  
கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அடுக்குமாடி வீடுகளில் உள்ளவர்கள் கூட  செப்டிக் டேங்க் அமைக்காமல் நேரடியாக கழிவுகளை கால்வாயில் விடுகின்றனர். குறிப்பாக பேருந்துகள் நிறுத்துமிடம், மரக்காணம் சாலை, மயிலம் சாலை, செஞ்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாலைகளில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் எந்த நிலையில் திண்டிவனம் இருந்ததோ அதே நிலையில்தான் இன்னமும் இருக்கிறது.  எனவே பாதாள சாக்கடை திட்டத்தினை 33 வார்டுகளிலும் அமைத்து தர வேண்டும்.

ராஜேந்திரன்( திருவள்ளுவர் நகர்)
திண்டிவனத்தில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்து வீடு, கடைகள் கட்டப்பட்டுள்ளது. நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி மிக விரைவில் பாதாளசாக்கடை அமைக்கவும், அதுவரை திறந்து கிடக்கும் கழிநீர் கால்வாயை மூடி நகராட்சி சார்பில் அனைத்து இடங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுகாதார சீர்கேட்டினை தடுக்க வேண்டும், கால்வாயில் குப்பைகளை கொட்டுவது அதிகரித்துவிட்டது. அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை தினமும் சேகரித்தால்  கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பவுல் செல்வம்(நகராட்சி பொறியாளர்)
பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் ஒன்றான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் கிடைக்கவில்லை.  திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை தீர்த்தகுளம் அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கு உள்ள இடத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குப்பை கிடங்கில் குவிந்திருக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரமாகவும், மக்காத குப்பைகளை அப்புறப்படுத்தி குப்பை கிடங்கை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றப்பட இருக்கிறது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், அரசு அனுமதி தந்தவுடன் இந்த ஆண்டுக்குள் திட்டம் தொடங்க வாய்ப்புள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க வாய்ப்பு
இது குறித்து திண்டிவனம் நகராட்சி ஆணையர் ஸ்ரீபிரகாஷ் கூறுகையில், திண்டிவனம் நகருக்கு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அரசுக்கு ரூ.280 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பியுள்ளது. முதல்கட்டமாக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு  இறுதிக்குள் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்காக  33 வார்டுகளில் இருந்தும் கழிவு நீர் செல்வதற்கான முழு வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளது.  குறுகிய தெருக்களுக்கு ஏற்றபடி எவ்வளவு வீடுகள் இருக்கிறது என கணக்கெடுக்கப்பட்டு அந்தந்த தெருக்களுக்கு ஏற்றபடி குழாய் பொருத்தப்பட்டு அனைத்து வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பாதாள சாக்கடையில் சென்று சேரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும் என்றார்.

Tags : Basic Sewer Scheme , Infrastructure, Tindivanam
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை