×

அமைச்சர்- அரசியல் அழுத்தத்தில் அடிப்படை வசதிகளுக்கு சிக்கல்: மறுசீரமைப்பு குளறுபடியால் மதுரை மக்கள் பரிதவிப்பு

* எம்பி, எம்எல்ஏ தொகுதி மாறுவதால் சிக்கல்
* குடிநீர், பாதாள சாக்கடை, வரிவிதிப்பில் பாகுபாடு

மதுரை: மறுசீரமைப்பில் செய்த குளறுபடியால் மதுரை மாநகராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அல்லாடுகின்றனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை மாநகராட்சி உருவானது. இங்கு 10 ஆண்டுகளுக்கு முன் 72 வார்டுகள் 52 சதுர கி.மீ. பரப்பில் இருந்தன. 2010ல் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், ஆனையூர் ஆகிய 3 நகராட்சிகள், திருநகர், ஆர்விபட்டி, விளாங்குடி பேரூராட்சி, திருப்பாலை, கண்ணநேந்தல், மேலமடை, வண்டியூர், உத்தங்குடி போன்ற ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 148 சதுர கி.மீ. பரபரப்புக்கு விரிவாக்கம் செய்யப்பட்டன. அப்போது மாநகராட்சி அதிகாரிகள் குழு அமைத்து, விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்ட 100 வார்டுகளை சீரான முறையில் உருவாக்கினர். அதனடிப்படையில் 2011ல் மாநகராட்சி தேர்தல் நடந்தது. 9 ஆண்டுகளாக பிரச்னை எழவில்லை.

இப்போது புதிதாக மாநகராட்சி எல்லை எதுவும் விஸ்தரிக்கப்படாத நிலையில், அதே 100 வார்டுகளை அப்படியே நீடிக்க செய்து இருக்கலாம். ஆனால் ‘மறு சீரமைப்பு’ என்ற பெயரில் மாற்றி அமைத்து இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். வார்டு எண் மாறி புது குழப்பம் உருவெடுத்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை, வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தாடப்பட்ட வார்டுகள்...:
 மாநகராட்சி எல்லைக்குள் வாக்காளர் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 508 ஆகும். இதனை 100 வார்டுகளாக பிரிக்கும்போது, 10 சதவீதம் வரை கூடுதலாகவோ, குறைவாகவே வாக்காளர் எண்ணிக்கையை நிர்ணயித்து நியாயமான முறையில் மறுசீரமைத்து இருக்க முடியும். எந்த பிரச்னையும் எழுந்து இருக்காது.

ஆனால் மறுசீரமைப்புக்கு விதிக்கப்பட்ட நெறிமுறைகளை தூக்கி எறிந்துவிட்டு, அதிகாரிகள் இஷ்டத்துக்கு வார்டுகளை வளைத்தும், உடைத்தும் பந்தாடி உள்ளனர். ஒரு வார்டை விட மற்றொரு வார்டில் இரு மடங்கிற்கு மேல் வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பாக அமைச்சரின் மதுரை மேற்கு தொகுதியில் ஏற்கனவே 15 வார்டுகள் இருந்தன. தற்போது இங்கு 22 வார்டுகளாக எகிறி உள்ளது. இதற்காக வார்டு வாக்காளர் எண்ணிக்கை ஆச்சரியமூட்டும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. விளாங்குடி உள்ளிட் 5 வார்டுகளில் சுமார் 7 ஆயிரம் என்ற ரீதியில் உள்ளது. மதுரை மத்திய தொகுதியில் ஏற்கனவே 22 வார்டுகள் இடம் பெற்று இருந்தன. மறு சீரமைப்பில் 16 வார்டுகளாக குறைத்து, அதிலுள்ள வாக்காளர் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்த்தி பெரியதாக்கப்பட்டுள்ளது.

 உதாரணமாக ஆரப்பாளையம் பகுதியிலுள்ள பழைய 14 வது வார்டில் 9,908  வாக்காளர் இருந்தனர். இதோடு பழைய 15வது வார்டு பகுதிகளை சேர்த்து புதிய 58வது வார்டாக உருவாக்கி இதில் 19,164 வாக்காளர் திணிக்கப்பட்டுள்ளனர். 48வது வார்டில் 7 ஆயிரம் பேரும், 100வது வார்டில் 19 ஆயிரத்து 500 பேரும் வாக்காளர்களாக இருக்கின்றனர். மதுரை தெற்கு தொகுதியிலுள்ள பல வார்டுகளில் 20 ஆயிரம் பேர் நிறைந்துள்ளனர். ஒரு வார்டு மறுசீரமைப்பில் சட்டமன்ற தொகுதி மாறக்கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், 18 வார்டுகள் மறுசீரமைப்பில் சட்டப்பேரவை தொகுதி மாறி அமைந்துள்ளன. இதன்மூலம் பல தொகுதிகள் மதுரையில் இருந்து விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு மாறி உள்ளன. இதனால் ஒரு எம்பியோ, எம்எல்ஏவோ தனது தொகுதி மேம்பாட்டு நிதியை வார்டுகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் எழுகிறது.

அரசு திட்ட நிதியோ. மாநகராட்சி நிதியோ வார்டு மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயித்து ஒதுக்குவது இல்லை. 100 வார்டுகளுக்கும் ஒரே மாதிரி ஒதுக்கும்போது, சிறிய வார்டுக்கு ஆதாயமும், பெரிய வார்டுக்கு பாதகமும் ஏற்படும். கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போது, வார்டுக்கு 2 மணி நேரம் வீதம் குழாயில் சப்ளையாகும். பெரிய வார்டுகளில் வீடுகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கிடைக்கும் குடிநீர் அளவு குறைந்து மக்கள் பரிதவிப்பார்கள். மாநகராட்சியில் 27 உதவி பொறியாளர், 11 சுகாதார ஆய்வாளர் மட்டுமே உள்ளனர். சுகாதார பணியாளர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர். இவர்கள் வார்டுகளுக்கு பிரிக்கும்போது பெரிய வார்டுகள் பெரும் பாதிப்பு உண்டாகி, சுகாதாரம், பாதாள சாக்கடை பராமரிப்பில் பாகுபாடு உருவெடுக்கும்.

சொத்து வரி விதிப்பில் பி கிரேடிலுள்ள வார்டு தெருக்கள், ஏ கிரேடு வார்டுக்கு மாறியதால் அங்கு வரி உயரும். அமைச்சர், அரசியல் தலையீட்டினால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வார்டு மறுசீரமைப்பு மக்களை பரிதவிக்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. இது மதுரைக்கு வந்த சோதனையா என மக்கள் கேட்கின்றனர்.

மாநகராட்சி அதிகாரி மழுப்பல்
மறுசீரமைப்பில் ஈடுபட்ட மாநகராட்சி முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “மறு சீரமைப்பை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் 3 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு பதில் கேட்டு ஐகோர்ட் கிளை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே அதற்கான விளக்கத்தை அளிக்க இருக்கிறோம். அதற்கு முன் பதில் சொல்ல இயலாது” என்று நழுவினார்.

சீரமைப்பா? சீர்குலைவா?
சமூக ஆர்வலர் ராஜன் கூறும்போது, “மாநகராட்சி எல்லை விரிவாக்கம் இல்லாத நிலையில் வார்டு மறுசீரமைப்பு தேவையில்லை. தேவை என்று கருதினால் வார்டு எண்ணிக்கையை அதிகரித்து இருக்கலாம். ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக வார்டு சீரமைப்பு என்ற பெயரில் சீர்குலைவு நடந்துள்ளது. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பதால் 100ல் 61 வார்டுகளை குறி வைத்து திட்டமிட்டு அதிகாரிகள் மூலம் மோசடியாக பிரித்துள்ளனர். பெரிய, சிறிய வார்டுகளாக இருப்பதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.” என்றார்.

பொன்விழா நேரத்தில் பெருங்குழப்பம்
மீனாட்சி கோவிலை சுற்றி 2.6 சதுர கி.மீ. பரப்பில் 1866ல் மதுரை நகராட்சி அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அடுத்தடுத்து வைகை ஆற்றின் இருபக்கமும் நகராட்சி எல்லை விரிந்தது. 1971ல் மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. விஸ்தரிக்கும்போது எல்லாம் 56. 67, 72 என வார்டு எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. 2010ல் மாநகராட்சி எல்லை 148 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகள் ஆக்கப்பட்டன. தற்போது எல்லை விரிவாக்கம் எதுவும் இல்லாமல் 100 வார்டுக்குள் மறுசீரமைப்பு நடைபெற்று குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. 2021ல் மாநகராட்சி பொன்விழாவை காண உள்ளது. எனவே கூடுதல் நிதி பெற வாய்ப்புள்ள நிலையில் வார்டு குழப்பம் உருவாகி இருப்பது வேதனைக்குரியது.

சட்டவிரோதமாக 61 வார்டுகள் பிரிப்பு
மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் கூறியதாவது: வார்டு சீரமைப்பை ஆய்வு செய்தேன். வார்டு அளவு முரண்பட்டுள்ளது. 61 வார்டுகள் சட்டவிரோதமானது.  பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 வார்டுகளில் 34 வார்டுகள் பெண்கள் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை மீறி உள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 17 வார்டுகள் பொது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. பொது பிரிவில் இடம் பெற வேண்டிய 17 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 மத்திய தொகுதியில் ஏற்கனவே இருந்த 22 வார்டுகள் 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரை மேற்கு தொகுதியில் ஏற்கனவே இருந்த 15 வார்டுகள் 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இங்குள்ள வார்டுகள் பெரும்பாலும் சராசரி வாக்காளர் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. ஒதுக்கீட்டு வார்டுகள் மத்திய தொகுதியில் அதிகம். மேற்கு தொகுதியில் குறைவு.  திட்டமிட்டு பெரும் முறைகேடு நடந்துள்ளது. 100 வார்டுகளில் 61 வார்டுகள் தவறான முறையில் வைத்துக் கொண்டு தேர்தல் நடத்துவது நியாயம் இல்லை. சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. எனவே மீண்டும் மறுசீரமைப்பு செய்து மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இவ்வாறு கூறினார்.

Tags : disaster Minister ,Madurai ,disaster , Problems with infrastructure, renovation mess
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...