காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் ஒன்று திரள்வீர்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் மடல்

சென்னை: காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் ஒன்று திரள்வீர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவதாவது; தி.மு.க.வைப் பொறுத்தவரை தமிழக விவசாயிகளின் நலன் காப்பதில், அவர்களுக்குத் துணைநிற்பதில் உறுதியாக இருக்கிறது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் – ஒப்பந்தங்கள் – தனியார் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

அதற்கான அறப்போர்க் களம்தான் ஜனவரி 28ஆம் நாள். விவசாயிகளின் விரோதியான மத்திய பா.ஜ.க. - மாநில அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து 5 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தஞ்சை வடக்கு - தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாகவும், புதுக்கோட்டை வடக்கு – தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலிலும், கடலூர் கிழக்கு – மேற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகிலும், நாகை வடக்கு – தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம், அவரி திடலிலும், திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் என எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற இருக்கிறது.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே.. உலகிற்கே சோறிடும் உழவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் இது. இந்த அறப்போர்க் களத்தில் கழகத்தின் அனைத்து அமைப்புகளையும் இணைத்துப் பெருந்திரளாகக் கூடுங்கள். தோழமைக் கட்சியினரைத் துணைக் கொள்ளுங்கள். விவசாயப் பெருமக்களைத் திரட்டுங்கள். இயற்கை ஆர்வலர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், சமூக நலத்தில் அக்கறையுள்ளோர் என அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுங்கள்.

மனிதநேயமற்ற இந்த உத்தரவு மனித குலத்தையே சீரழிக்கும்” - பா.ஜ.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும், காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும், உணவுப் பொருள் உற்பத்தியா, ஹைட்ரோ கார்பனா என்ற கேள்விக்கு விடைகாணவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் ஒன்று திரள்வீர். உரிமைக்குரல் எழுப்புவீர். கோட்டையில் கொலு பொம்மைகளாக வீற்றிருப்போரின் செவிகள் அதிரட்டும்! டெல்லிவரை எதிரொலிக்கட்டும்!” இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

Related Stories: