குரூப்- 4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் கைது; சாப்பிட வேனை நிறுத்தும் போது விடைத்தாள்களை மாற்றியது அம்பலம்

சென்னை: குரூப்- 4 தேர்வு முறைகேடு வழக்கில் ஒம்காந்தன் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டிஜிபி ஆவண கிளார்க்கான ஓம்காந்தன் விடைத் தாள்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். விடைத்தாள்களை வேனில் கொண்டு செல்லும் வழியில் அதை மாற்றி முறைகேட்டிற்கு உதவிசெய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்காக வேனை நிறுத்தும் போது விடைத்தாள்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஓம்காந்தனிடம் விசரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 4 பதவியில் 9,398 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுக்கு பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்திருந்தனர். இதன்காரணமாக, விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 16.30 லட்சத்தை தொட்டது.

கடந்த செப்டம்பர் 1ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. நவம்பர் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அங்கு தேர்வு எழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஆனால், சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் தோல்வியை சந்தித்தனர். இதனால் வெளிமாவட்டத்தில்  இருந்து தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றதில் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. சொந்த மாவட்டத்திலேயே தேர்வு மையங்கள் இருக்கும்போது இவர்கள் ஏன் இங்கு வந்து தேர்வு எழுதினர் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த  மையங்களில் பெரும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கஷ்டப்பட்டு தேர்வு எழுதியவர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமேஸ்வரம், கீழக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று விசாரித்தனர். மேலும் 100 பேருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் விசாரித்தனர். இதில் முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் தலைமையில், எஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணையில் இறங்கினர். அப்ேபாது தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய வெளி மாவட்டங்களை சேர்ந்த 99 பேரை டிஎன்பிஎஸ்சி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், 99 பேரும் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்தது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட, டிபிஐ அலுவலக உதவியாளர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் (39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த திருக்குமரன் (35), தேர்வில்  முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (21) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மேலும் 9 பேரிடம் தொடர்ந்து எழும்பூர் சிபிசிஐடி  தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை  நடக்கிறது.  கடலூர் சிபிசிஐடி போலீசார் உள்ளூர் போலீஸ் உதவியுடன் பண்ருட்டி, சிறு கிராமம் ஆகிய 2 பகுதிகளுக்கு நேற்று முன்தினம் விரைந்தனர். அங்கு 2 வீடுகளில் ஆய்வு நடத்தினர். இதில் ஏஜென்டிடம் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும்  ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில் குரூப்- 4 தேர்வு முறைகேடு வழக்கில் ஒம்காந்தன் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: