குடியுரிமை திருத்த சட்டம் மூலம் மக்களை பிரிக்க பா.ஜ. அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை, லெட்சுமிபுத்தில் உள்ள மொழிப்போர் தியாகி சாரங்கபாணி அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. என்னென்ன கொடுமைகள்  நடக்கிறது. இந்திய நாட்டு மக்களை மொழி, இனம், மதம் மூலம் பிளவுப்படுத்தக்கூடிய  சூழலை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு இந்தி, சமஸ்கிருதம்தான் இருகண்கள்.  மற்ற மொழிகள் குறித்து கவலை கிடையாது. இந்தியை திணிக்கும் முயற்சியைதான்  தொடர்ந்து செய்கின்றனர். நாம் எதிர்ப்பு தெரிவித்தால் தற்காலிகமாக வாபஸ் என  திரும்ப பெறுகின்றனர்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின்  அடையாளம் இந்தி. இந்திதான் அதிக மக்கள் பேசும் மொழி என விளக்கினார். அமித்ஷா அறிவித்ததும் வேண்டாம் சோதனை;  தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நிலையை உருவாக்கிவிடாதீர்கள் என எச்சரித்தேன்.

எச்சரித்ததும்  தமிழக ஆளுனர் என்னை அழைத்தார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஆளுனரை  சந்தித்தேன். அமித்ஷா சொன்னது நீங்கள் எண்ணும் அர்த்தமல்ல; எனவே போராட்டம்  வேண்டாம்; அதை ரத்து செய்யுங்கள் என்றார். எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்.  எந்த கோணத்தில் சொல்கிறீர்கள் என கேட்டேன். மத்திய அரசு பிரதிநிதியாக  சொல்கிறேன் என்றார். மத்திய அமைச்சர் அமித்ஷா சொல்வாரா எனக்கேட்டேன்.  நிச்சயமாக அறிவிப்பார் என்றதும் அண்ணா அறிவாலயத்துக்கு வருவதற்கு முன்பே  அமித்ஷா விளக்கம் அளித்தார். ஆளுனர் எதிர்க்கட்சி தலைவரை அழைப்பது வழக்கம் அல்ல; முதல்வரை அழைப்பதுதான் வழக்கம். தி.மு.க. சொன்னால் செய்யும்; சொல்வது  மட்டுமல்ல அதில் வெற்றியும் பெறும் என்ற உணர்வு மத்திய அரசுக்கு  இருந்திருக்கிறதா இல்லையா? ஆனால், எந்த உணர்வும், கொள்கையும் இல்லாத  ஆட்சியும், முதல்வரும் இங்கு உள்ளனர். எந்த உணர்வும் இல்லாதவர்கள். எந்த  உரிமையையும் காவுகொடுக்க தயங்காதவர்கள் என்பது கவர்னருக்கே  தெரிந்திருக்கிறது.

பா.ஜ.க., மோடி பாதம் தாங்கும் முதல்வராக எடப்பாடி  உள்ளார். தமிழ்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஜோக்கர் மாதிரி அவர்.  தேமுதிகவில் இருக்கும்போது சட்டமன்றத்தில் விஷயத்தோடு பேசுகிறார் என  நினைத்தேன். அதிமுக அமைச்சராக ஆனபின் அவரது பேச்சை கேட்கமுடியவில்லை. அவர் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் இல்லை; இந்தி வளர்ச்சி அமைச்சர்.  சமஸ்கிருதத்தை வளர்க்கும் அமைச்சராக இருக்கிறார். உலக தமிழ் ஆராய்ச்சி  நிறுவனத்தில் இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்கிறார். முதல்வருக்கு இருக்கும் ஒரே பற்று பணம் பற்று மட்டும்தான். காசுக்காக அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்துவிட்டு வேடிக்கை  பார்க்கும் ஆட்சி, எடப்பாடி ஆட்சி.  எடப்பாடி கையிலிருக்கும் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விடுவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து வருகிறது. விரைவில் நாம்தான்  தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம். வந்ததும் முதல் வேலையாக எடப்பாடியாக  இருந்தாலும் கடைக்குட்டி எந்த அமைச்சராக இருந்தாலும் ஊழல்களை தண்டவாளம்  ஏற்றி முதல் வேலையாக அவர்களை கைது செய்வேன்.

இப்போது மத்திய  அரசின் சர்வாதிகார போக்கு அடிப்படையில் என்னென்ன கொடுமை நடக்கிறது.  குடியுரிமை சட்டத்திருத்தத்தால் நாடே கொழுந்துவிட்டு எரியும் சூழலை மத்திய  அரசு உருவாக்கி வருகிறது. இச்சட்டத்தை ஆதரித்து அதிமுக, பா.ம.க.  மாநிலங்களவையில் ஓட்டளித்ததே இப்பிரச்னைக்கு காரணம். இச்சட்டத்தை  மாநிலங்களவையில் ஆதரித்து ஓட்டுபோட்ட பல்வேறு மாநிலங்களே இன்று இச்சட்டத்தை  அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  தமிழக முதல்வர்  எடப்பாடி இன்னும் ஏன் வாய்மூடி இருக்கிறார். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் மக்களை பிரிக்க பாஜ அரசு முயற்சி செய்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தம்  தொடர்பாக பிப் 2 - 8ம் தேதி வரை வீடு வீடாக திண்ணை பிரசாரம் செய்து  கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளோம். கருணாநிதி  வழியில் தொடர்ந்து போராடுவோம். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இரண்டையும்  ஒன்றாக கருதுபவர்கள் கலைஞரின் உடன்பிறப்புகள்.  நடராஜன், தாளமுத்து, சின்னசாமி, அரங்கநாதன் தியாக தீபத்தால் எழுப்பப்பட்ட  இயக்கம் தி.மு.கழகம். தமிழரை, தமிழ்நாட்டை காக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : BJP ,MG Stalin ,dividend people , Citizenship Amendment Act, BJP Government effort, MK Stalin
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்தை...