கட்சி சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிரடி கைது: 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கோவை: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். அவர் மீது கட்சி சின்னத்தை தவறாக பயன்படுத்தியது, அவதூறு பரப்பியது உள்பட 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி. இவர், கடந்த 1989ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்ேகாடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தபோது, இவர், ஓ.பி.எஸ். அணியில் இருந்தார்.  இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆனாலும், தனியார் டி.வி. விவாத நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்து வந்தார். இது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 இதுமட்டுமில்லாமல், அதிமுக பெயரில் போலி இணையதளம் துவக்கி, கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வந்தார். அ.தி.மு.க. தலைமை பற்றி அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து பதிவிட்டு வந்துள்ளார். இதுபற்றி கோவை மாவட்டம் சூலூர் முத்துக்கவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, சூலூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில், சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், இந்திய தண்டனை சட்டம் 417, 418, 419, 464, 465, 468, 479, 481, 482, 485 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய 11 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தார்.  இதைத்தொடர்ந்து, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அவரது வீட்டை, கருமத்தம்பட்டி போலீஸ் டி.எஸ்பி. பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று காலை சென்றனர். வீட்டின் கதவை திறந்து வெளியே வந்த அவரை, கைது செய்வதாக போலீசார் கூறினர். ஆனால், அவர் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், கைதுசெய்து, சூலூர் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனர். கைது நடவடிக்கையின்போது, கே.சி.பழனிசாமிக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு நிலவியது. பின்னர், காவல் நிலையத்துக்கு காலை 6 மணிக்கு கொண்டு சென்று மாலை 5 மணி வரை விசாரணை நடத்தினர்.

அவரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர். இதை, ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு செய்துகொண்டனர். அவரை சந்திக்க வக்கீல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து வக்கீல்கள் 4 பேர் காவல் நிலைய வாசலில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர்.  நேற்று மாலை உரிய ஆவணங்களுடன் சூலூர் மாஜிஸ்திரேட் வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், 15 நாள் காவலில் ைவக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது பின்னணி என்ன?

கைதான கே.சி. பழனிசாமி, அ..தி.மு.க.வில், மாநில அளவில் பதவி வாங்கித்தருவதாக கூறி கட்சி தொண்டர்கள் பலரிடம் பணம்   வாங்கிக்கொண்டு, ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கே.சி.பழனிசாமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி மற்றும் தற்போதைய இரட்டை தலைமை பதவி தொடர்பாக டெல்லி  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், மிக விரைவில்  தீர்ப்பு  வர உள்ளது. இந்த தீர்ப்பு, அ.தி.மு.க.வின் இரட்டை தலைமைக்கு எதிராக  வந்தால், அது ஆட்சியாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக்கருதி,  கே.சி.பழனிசாமியை மிரட்டி, வழக்கை திரும்ப பெற  போலீஸ் மூலம் நடவடிக்கை  மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: