மதுரையில் போக்சோ நீதிமன்றம் திறப்பு: ஓராண்டுக்குள் விசாரணை முடிக்காவிட்டால்... ஐகோர்ட் கிளை நீதிபதி எச்சரிக்கை

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று திறக்கப்பட்டது. இங்கு வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்காவிட்டால் விளக்கம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதி பேசினார்.  மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமாபானு வரவேற்றார். ஐகோர்ட் கிளை நீதிபதி ஜெ.நிஷாபானு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். விழாவுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி டி.ராஜா தலைமை வகித்து பேசியதாவது:  இந்த நீதிமன்றம் செயல்படத் துவங்கியதும், போக்சோ வழக்குகளே இல்லை என்ற நிலைக்கு வர வேண்டும். பெண்களை தெய்வமாக பார்க்கிறோம். தாய் தான் நமது முதல் தெய்வம். இதேபோல் ஒவ்வொருவருக்கும் அவரது கல்வி தான் சிறந்த தெய்வமாக இருக்கும். நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கையில் தான் உள்ளது.

நம் தாய் மற்றும் சகோதரிகளை பார்ப்பதைப் போல மற்ற பெண்களையும் பார்க்க வேண்டும். ஆண், பெண் இடையே பாகுபாடு இருக்க கூடாது. இந்தியாவிலுள்ள சட்டங்களிலேயே மிகவும் கடுமையான சட்டமாக போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க முடியும். போக்சோ நீதிமன்றம் அல்லது ஐகோர்ட்டை தவிர வேறு எந்த நீதிமன்றத்தாலும் ஜாமீன் வழங்க முடியாது. ஓராண்டிற்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நீதிபதி ஐகோர்ட்டிற்கு விளக்கமளிக்க வேண்டும். சந்தேகத்தின் பலனை சாதகமாக கொள்ள முடியாது. மிகவும் கவனத்துடன் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்கள் மீதான குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காகத் தான் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: