‘வெளியே வர பிரார்த்திக்கிறேன்’ சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டியால் அதிமுகவில் சலசலப்பு

திருவில்லிபுத்தூர்:  சசிகலா சிறையில் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. அவர் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு பிரார்த்தனை செய்கிறேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கோயில் இடங்களில் உட்கார்ந்து கொண்டு, இந்து மதத்தை தவறாக பேசி வருபவர்களை வெளியேற்றுவது காலத்தின் கட்டாயம். பெரியார் குறித்து ரஜினி தவறாக எதுவும் பேசவில்லை. அவர் பெரியார் குறித்து பேசியதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நடந்த நிகழ்வை மட்டுமே அவர் கூறினார். பிடித்தவர்கள் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளட்டும்.

பிடிக்காதவர்கள் அமைதியாக இருந்து கொள்ளட்டும். ரஜினியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்றது.  சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. அவர் வெளிவர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி’’ என்றார். அதிமுக அமைச்சர்கள் சசிகலா, டிடிவி.தினகரன் குறித்து எதிர்ப்பு கருத்துக்கள் கூறி வரும் நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சசிகலா சிறையில் இருப்பது வேதனையளிப்பதாக கூறியது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மறித்தவர்களை அடித்திருப்பார் தேனி எம்பி நேரம் வரும்போது தக்க பதிலடி

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் இரவு அளித்த பேட்டி: தேனி மாவட்டம், கம்பத்தில் ரவீந்திரநாத் எம்பியின் காரை மறித்து, அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். வன்முறையால் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவில் உள்ளவர்கள் கோழைகள் கிடையாது. எம்பி நினைத்திருந்தால் கீழே இறங்கி அடித்திருக்க முடியும். மதரீதியான பிரச்னைகள் வரக்கூடாது. நம்மால் ஒரு சண்டை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் அமைதியாக இருந்தார். உனக்கு பிடிக்காத திட்டத்தை அரசு நிறைவேற்றுகிறது என்று கருதினால், சட்டரீதியாக நீதிமன்றம் செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு காரை மறித்து அடிப்பது என்றால், அந்த வழியை நாங்களும் பின்பற்ற முடியும். அதிமுகவினர் வீரம் கொண்டு எழுந்தால் சிங்கமாக எழுவோம். நாங்கள் பயந்து ஓடும் ஆட்கள் கிடையாது. நேரம் வந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்றார்.

Related Stories: